செய்திகள்
எல்.முருகனை பற்றி முகநூலில் அவதூறு: வேதாரண்யத்தில், பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம் - 34 பேர் கைது
மத்திய மந்திரி எல்.முருகனை பற்றி முகநூலில் அவதூறு பரப்பியவரை கைது செய்யாததை கண்டித்து வேதாரண்யத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜனதாவினர் 34 பேரை போலீசார் கைது செய்தனர்.
வேதாரண்யம்:
மத்திய மந்திரி எல்.முருகனைப் பற்றி அவதூறாக முகநூலில் பதிவிட்ட நபரை கைது செய்யாததை கண்டித்து வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு பாரதீய ஜனதா கட்சியினர் நாகை மாவட்ட தலைவர் நேதாஜி தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய மந்திரி எல்.முருகனை பற்றி அவதூறாக முகநூலில் பதிவிட்ட நபரை கைது செய்யாத போலீசாரை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
இதை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்து போலீசார், பாரதீய ஜனதா நாகை மாவட்ட தலைவர் நேதாஜி உள்பட 34 பேரை கைது செய்து அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மேலும் இதுகுறித்து 34 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல திருமருகல் பஸ் நிலையத்தில் பாரதீய ஜனதாவினர் ஒன்றிய தலைவர் அனந்தகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.
நாகை புதிய பஸ் நிலையம் அருகே பாரதீய ஜனதாவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து. தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியன், வெளிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்ட 22 பேரை கைது செய்தனர்.