செய்திகள்
கட்டிட தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போடும் முகாமை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தொடங்கிவைத்து பார்வையிட்ட காட்சி

சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை 2½ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி - அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தகவல்

Published On 2021-07-14 17:26 GMT   |   Update On 2021-07-14 17:26 GMT
சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை 2½ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி ேபாடப்பட்டு உள்ளது என்று அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.
திருப்புவனம்:

தொழிலாளர் நலத்துறை சார்பில் கட்டிட தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் திருப்புவனத்தில் உள்ள தனியார் திருமண மகாலில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில் நடந்தது. தமிழரசி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். மதுரை மண்டல தொழிலாளர் நலத்துறை கூடுதல் தொழிலாளர் ஆணையர் குமரன் அனைவரையும் வரவேற்றார்.

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் சிறப்பு தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழகத்தை பொறுத்தவரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சீரிய நடவடிக்கையால் செங்கல்பட்டு மற்றும் ஊட்டியில் நாளொன்றுக்கு 2 கோடி தடுப்பூசி மருந்துகள் தயாரிக்கும் அளவிற்கு உட்கட்டமைப்பு வசதிகள் தயாராக உள்ளன. தடுப்பூசி தயாரிக்க அனுமதி கேட்டு முதல்-அமைச்சர், பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார்.மத்திய அரசிடம் இருந்து தமிழகத்துக்கு வரும் தடுப்பூசி மருந்துகளை மாவட்டம் தோறும் பிரித்து அனுப்பப்பட்டு தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது.

சிவகங்கை மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட 2½ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு மாதத்திற்குள் 100 சதவீதம் தடுப்பூசி அனைவருக்கும் போடப்படும். எனினும் பொதுமக்கள் கொரோனா விதிமுறைகளை கடைப்பிடித்து பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முகாமில் 3 ஆயிரத்து 702 கட்டிட தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடந்தது.

இதில் மதுரை மண்டல தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் சுப்பிரமணியன், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர்கள் ராஜ்குமார், கோட்டீஸ்வரி, காரைக்குடி அப்போலோ மருத்துவமனை நிர்வாக அலுவலர் லாவண்யா, பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர் சேங்கைமாறன், முன்னாள் எம்.எல்.ஏ. மாரியப்பன் கென்னடி மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News