செய்திகள்
கோவில் நிலத்தில் கட்டப்பட்ட வீட்டின் முன்பக்கத்தில் அறநிலையத்துறை ஊழியர்கள் நோட்டீஸ் ஒட்டியதை காணலாம்

கோவில் நிலத்தில் கட்டிய 12 வீடுகளை 15ந் தேதிக்குள் அகற்ற நோட்டீஸ்

Published On 2021-07-09 04:08 GMT   |   Update On 2021-07-09 04:08 GMT
கோவில் நிலத்தில் 12 வீடுகள், ஒரு கடை என 13 கட்டிடங்கள் உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையாளர் ஏற்கனவே வழக்கு தொடர்ந்திருந்தார்.
சிவகங்கை:

சிவகங்கை நகரில் மேலூர் ரோட்டில் உள்ள கவுரி பிள்ளையார் கோவிலுக்கு 142 ஏக்கர் நிலம் உள்ளது. பல கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த நிலத்தை தனியார் பலர் ஆக்கிரமித்துள்ளனர். இதற்கிடையே இந்த நிலம் தொடர்பாக ஐகோர்ட்டில் நடைபெற்ற வழக்கில் இது கோவிலுக்கு சொந்தமானது என்று தீர்ப்பு கூறப்பட்டது.

இந்த நிலையில் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் சுமார் 9 ஏக்கர் 58 சென்ட் இடத்தை ஒருவர் ஆக்கிரமித்து சில மாதங்களாக கட்டிடம் கட்டி வந்தார். இதை தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த கட்டிடங்களை எந்திரம் மூலம் இடித்து அகற்றி நிலத்தை மீட்டனர். மேலும் ஆக்கிரமிப்பில் உள்ள கோவிலுக்கு சொந்தமான மற்ற இடங்களை மீட்கவும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர்.

கோவில் நிலத்தில் 12 வீடுகள், ஒரு கடை என 13 கட்டிடங்கள் உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையாளர் ஏற்கனவே வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் 13 கட்டிடங்களும் உள்ள இடம் கோவிலுக்கு சொந்தமானது என்றும், எனவே ஆக்கிரமித்து கட்டிய கட்டிடத்தை அகற்றி நிலத்தை கோவில் வசம் ஒப்படைக்கவேண்டும் என்று கடந்த 2019-ம் ஆண்டு உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இந்து சமயஅறநிலையத்துறை உதவி ஆணையாளர் செல்வி, கோவில் நிலத்தில் கட்டப்பட்ட வீடுகள் உள்பட 13 கட்டிடங்களையும் அகற்றி நிலத்தை வருகிற 15-ந்தேதிக்குள் கோவில் வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் அந்த இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடித்து அகற்றப்படும் என்று அறிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கான நோட்டீசை ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டுள்ள 12 வீடுகள், ஒரு கடையின் முன்பக்கத்தில் அறநிலையத்துறை அதிகாரிகள் நேற்று ஒட்டினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News