செய்திகள்
புள்ளாச்சி குடியிருப்பு பகுதி தொடக்கப்பள்ளியின் சுற்றுச்சுவர் கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ள காட்சி.

வடகாட்டில் கிடப்பில் போடப்பட்ட பள்ளி சுற்றுச்சுவர் கட்டும் பணி

Published On 2021-07-08 22:33 IST   |   Update On 2021-07-08 22:33:00 IST
வடகாட்டில் பள்ளி சுற்றுச்சுவர் கட்டும்பணி கிடப்பில் ேபாடப்பட்டுள்ளது. மேலும் சாத்தன்பட்டி பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கோரிக்கை விடப்பட்டுள்ளது.
வடகாடு:

வடகாடு புள்ளாச்சி குடியிருப்பு பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் சுற்றுச்சுவர் கடந்த 2018-ம் ஆண்டு கஜா புயலில் சேதமடைந்தது. இந்தநிலையில் பள்ளியின் சுற்றுச்சுவர் கட்டுவதற்கு ரூ.5 லட்சத்து 65 ஆயிரம் ஒதுக்கப்பட்டது. மேலும் தேர்தலுக்கு முன்பு எம்.எல்.ஏ.வாக இருந்த தற்போதய சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டி இதற்கான பணிகளை தொடங்கி வைத்தார்.

அதன்பின் அந்த பணிகள் கிடப்பில் போடப்பட்டது. எனவே இனிமேலாது இந்த பணியினை உடனே தொடங்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல் வடகாடு, மல்லிகைபுஞ்சை, சாத்தன்பட்டி, பள்ளத்திவிடுதி, காமராஜர்புரம் போன்ற பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவிவருகிறது. இந்த பகுதியில் ஒருசில இடங்களில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர்த் தேக்கத்தொட்டி கட்டப்பட்டுள்ளது. ஆனால் ஆழ்துளை கிணறுகளில் நீர் மட்டம் குறைந்ததால் தொட்டிகளுக்கு குறைந்த அளவே தண்ணீர் ஏற்றப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் அனைவருக்கும் தண்ணீர் கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் சிலர் குடிதண்ணீரை முறைகேடாக பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. எனவே, உரிய நடவடிக்கை எடுத்து தண்ணீர் தட்டுப்பாடு இன்றி கிடைக்க செய்ய வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News