செய்திகள்
கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோவிலை படத்தில் காணலாம்.

கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரகதீஸ்வரர் கோவிலை வழிபாட்டிற்காக திறக்க வேண்டும் - தமிழக அரசுக்கு, பக்தர்கள் கோரிக்கை

Published On 2021-06-18 12:00 GMT   |   Update On 2021-06-18 12:00 GMT
கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோவிலை வழிபாட்டிற்காக திறக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மீன்சுருட்டி:

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் இரண்டாம் அலையை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டன. இதன்படி, அரியலூர் மாவட்டத்தில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள உலக புராதன சின்னமான கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலும் மூடப்பட்டது.

தற்போது நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வழிபாட்டுத்தலங்கள், அருங்காட்சியகங்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது.

இதையடுத்து, தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு தற்போது குறைந்து வருவதால், கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோவிலை திறக்க தமிழக அரசு அனுமதி அளிக்கும் என்று பக்தர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் தமிழக அரசு அனுமதி அளிக்காததன் காரணமாக நேற்று கோவில் திறக்கப்படவில்லை.

அரியலூர் மாவட்டத்தை பொறுத்தவரை தமிழகத்தில் தொற்று எண்ணிக்கை குறைந்த மாவட்டங்களில் 2-ம் இடத்தில் உள்ளது. எனவே, மத்திய அரசு வழிகாட்டுதலின்பேரில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி, கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோவிலை திறந்து, தரிசனத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News