செய்திகள்
கிராம நூலகங்களை சீரமைக்க கோரிக்கை
வாசிப்பு மற்றும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அறிவிப்பு வெளியிட்டுள்ள தமிழக அரசுக்கு உடுமலை நூலக வாசகர் வட்டம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், கிராம நூலகங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடுமலை:
தமிழக அரசு மதுரையில் ரூ. 70 கோடி செலவில், கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படும். எழுத்தாளர்களை ஊக்குவித்து சிறப்பிக்க, ‘இலக்கிய மாமணி’ என்ற விருது உருவாக்கப்பட்டு எழுத்தாளர்கள் மூன்று பேருக்கு ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்படும் என்பது உட்பட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
இதற்காக உடுமலை முதற்கிளை நூலக வாசகர் வட்டம் சார்பில் தமிழக அரசுக்கு பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்துள்ளனர்.வாசகர் வட்ட தலைவர் லெனின்பாரதி கூறுகையில், எழுத்தாளர்களுக்கும், வாசிப்புக்கும் சிறப்பு செய்யும் வகையில் தமிழக அரசின் அறிவிப்புகள் உள்ளது. சமுதாயத்தின் அனைத்து பிரிவினருக்கும் அறிவை வழங்கும் ஆற்றல் மையமாக மதுரையில் அமையும் நூலகம் இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.
ஒவ்வொரு ஊராட்சியிலும் 2006ல், அமைக்கப்பட்ட அண்ணா மறுமலர்ச்சித் திட்ட நூலகங்கள் கடந்த பல ஆண்டுகளாக பயன்பாடு இல்லாமல் பாழடைந்து கிடக்கிறது. அவற்றை மீண்டும் புனரமைத்து கிராம மக்களின் மக்களை பயன்பாட்டுக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.