செய்திகள்
ஆண்டிமடம் பகுதியில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை காற்றில் பறக்கவிட்ட வாகன ஓட்டிகள்
ஆண்டிமடம் பகுதியில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை காற்றில் பறக்கவிட்டு, வாகன ஓட்டிகள் வலம் வருகின்றனர்.
ஆண்டிமடம்:
கொரோனா பரவலை தடுக்க தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் கடைவீதி பகுதிகளில் வாகனங்கள் வந்து சென்ற வண்ணம் உள்ளன. ஆண்டிமடம் பகுதியில் வயது வித்தியாசம் இல்லாமல் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதில் சிலர் சிகிச்சை பெற்று குணமாகி வீடு திரும்பி வருகின்றனர். இளைஞர்கள், நடுத்தர வயதினர், முதியவர்கள் என வயது வித்தியாசமின்றி பலரும் உயிரிழக்கும் நிலை உள்ளது.
தற்போது தமிழக அரசு முழு ஊரடங்கை வருகிற 7-ந் தேதி வரை நீட்டித்ததோடு, பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்க்க காய்கறி, பழம் மற்றும் மளிகை பொருட்களை வீடுகளுக்கே நேரில் கொண்டு சென்று விற்பனை செய்யப்படும் என்று அறிவித்துள்ளது. ஆனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை காற்றில் பறக்கவிட்டு, வாகன ஓட்டிகள் ஆண்டிமடம் கடைவீதி பகுதிகளில் வலம் வருகின்றனர்.
கடைவீதிக்கு வாகனங்களில் வருபவர்களை போலீசார் நிறுத்தி விசாரிக்கும்போது மருந்து வாங்க வந்தேன், உணவு வாங்க வந்தேன் என்று பொய்யான காரணங்கள் கூறுகின்றனர். வெளியே வருவதால் கொரோனா தொற்று ஏற்பட்டால், பாதிக்கப்படுவது தாங்கள்தான் என்ற எண்ணமின்றி, வாகன ஓட்டிகள் பொய் காரணங்களை கூறி அவர்களையே ஏமாற்றிக்கொள்ளும் நிலை உள்ளது.
மேலும் போலீசார், வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்தும் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தும் வருகின்றனர். ஆனாலும் சிலர் இருசக்கர வாகனத்தில் வருவதை நிறுத்தவில்லை. வெளியே சுற்றுபவர்களை நிறுத்தி தடுப்பூசி போட்டுக் கொண்டார்களா? என்று விசாரணை செய்து, சுகாதாரத்துறையினர் அங்கேயே ஒரு முகாம் அமைத்து, அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.