செய்திகள்
மரணம்

மஞ்சூர் அருகே அணை சீரமைப்பு பணியில் ஈடுபட்ட தொழிலாளி தவறி விழுந்து பலி

Published On 2021-05-29 10:26 GMT   |   Update On 2021-05-29 10:26 GMT
மஞ்சூர் அருகே அணை சீரமைப்பு பணியில் ஈடுபட்ட தொழிலாளி தவறி விழுந்து பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மஞ்சூர்:

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ளது அப்பர்பவானி அணை. மின்வாரியத்துக்கு சொந்தமான அப்பர்பவானி அணையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

வெளி மாவட்டத்தை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் ஒப்பந்த தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் நேற்று வழக்கம் போல் சுமார் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அணை சீரமைப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்கள்.

அப்போது அணையின் ‌ஷட்டர் அமைந்துள்ள பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த முருகன் (45) என்பவர் சுமார் 20 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்துள்ளாராம். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதைதொடர்ந்து சக தொழிலாளர்கள் முருகனை ஒரு வாகனத்தில் ஏற்றி மஞ்சூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மருத்துவர் பரிந்துரை செய்துள்ளார். இதை தொடர்ந்து தனியார் ஆம்புலன்ஸ் மூலம் முருகன் அழைத்து செல்லப்பட்டார். ஆனால் பாதி வழியிலேயே முருகன் பரிதாபமாக உயிரிழந்தார். இறந்த முருகன் மேட்டூர் கருமலைகூடல் பகுதியை சேர்ந்தவர்.

இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த குந்தா தாசில்தார் மகேஸ்வரி மருத்துவமனைக்கு சென்று சக தொழிலாளர்களிடம் விசாரித்தார். மேலும் இந்த சம்பவம் குறித்து மஞ்சூர் எமரால்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News