செய்திகள்
முறைகேடாக பயன்படுத்தினால் காய்கறி விற்பனைக்கான அனுமதி ரத்து - வியாபாரிகளுக்கு, தோட்டக்கலை அதிகாரி எச்சரிக்கை
நீலகிரி மாவட்டத்தில் காய்கறி விற்பனைக்கான அனுமதி சீட்டுகளை முறைகேடாக பயன்படுத்தினால் அனுமதி ரத்து செய்யப்படும் என்று வியாபாரிகளுக்கு, தோட்டக்கலை அதிகாரி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
ஊட்டி:
கொரோனா பரவலை தடுக்க தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் விவசாய பணிகளுக்கு செல்லும் தொழிலாளர்கள், காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யும் வாகனங்கள், கேரட் அறுவடைக்கு செல்லும் சரக்கு வாகனங்கள் அனுமதி சீட்டு பெற்று செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
அதன்படி ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஆகிய 4 வட்டாரங்களில் தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களில் அனுமதி சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. விவசாய பணிகளுக்கு விளைநிலம் தொடர்பான ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டும், விற்பனைக்கு செல்லும் வாகனங்கள் சங்கங்கள் மூலம் கொடுக்கப்படும் நபர்களுக்கும் அனுமதி சீட்டு வழங்கப்படுகிறது.
இதற்கிடையே ஊட்டியை சுற்றி உள்ள கிராமங்களில் காய்கறி, பழங்கள் விற்பனை செய்வதாக சிலர் அனுமதி வாங்கிவிட்டு, ஊட்டி நகரில் விற்பனை செய்து வந்தனர். இதனால் கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டது.
ஓரிடத்தில் விற்பனை செய்ய அனுமதி வாங்கி மற்றோரிடத்தில் விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட அனுமதி சீட்டு ரத்து செய்யப்படும் என்று தோட்டக்கலைத் துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
இதுகுறித்து தோட்டக்கலை துணை இயக்குனர் ஷிப்ளா மேரி கூறும்போது,
நீலகிரியில் ஸ்ட்ராபெரி, காளான், கேரட் சாகுபடி போன்ற விவசாய பணிகள் மற்றும் விற்பனைக்காக அனுமதி சீட்டு வழங்கப்படுகிறது. இதுவரை ஊட்டி வட்டாரத்தில் 234, குன்னூர் வட்டாரத்தில் 283, கூடலூர் வட்டாரத்தில் 131, கோத்தகிரி வட்டாரத்தில் 87 என மொத்தம் 735 அனுமதி சீட்டுகள் வழங்கப்பட்டு உள்ளது.
இந்த அனுமதி சீட்டுகளை முறைகேடாக பயன்படுத்தினால் சம்பந்தப்பட்டவர்களின் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்து உள்ளார். அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஊட்டி வட்டாரத்தில் நேற்று விவசாய பணிகளுக்கு 62, காய்கறிகள் விற்பனைக்கு 26 அனுமதி சீட்டுகள் வழங்கப்பட்டது.