செய்திகள்
கோகோகாடு பகுதி சாலையை தடுப்புகள் கொண்டு அடைத்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்கள் வெளியே நடமாடினால் நடவடிக்கை - கூடலூர் நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை

Published On 2021-05-27 12:07 GMT   |   Update On 2021-05-27 12:07 GMT
கூடலூரில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்கள் தடையை மீறி வெளியே நடமாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையாளர் பாஸ்கரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கூடலூர்:

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்தை தாண்டி உள்ளது. தொடர்ந்து தொற்றும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கூடலூர் வருவாய் கோட்ட பகுதியில் தினமும் 150-க்கும் மேற்பட்டவர்கள் பாதித்து வருகின்றனர். இதேபோல் கூடலூர் நகராட்சி பகுதியில் உள்ள காசிம் வயல், சளிவயல், சிவசண்முக நகர், 1-ம் மைல் கோகோ காடு ஆகிய இடங்களில் வசிக்கும் மக்களிடம் தொற்று வேகமாக பரவி வருகிறது.

கொரோனா பரவல் அதிகம் உள்ள இடங்களை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து நகராட்சி அதிகாரிகள், தீவிர தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இருப்பினும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்களிடம் தொற்று பரவல் அதிகரித்து வந்தது.

இதைத்தொடர்ந்து கூடலூர் ஆர்.டி.ஓ. ராஜகுமார், நகராட்சி ஆணையாளர் பாஸ்கரன், போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெயசிங், இன்ஸ்பெக்டர் நெப்போலியன், நகராட்சி சுகாதார ஆய்வாளர் சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் நேற்று திடீர் ஆய்வு நடத்தினர்.

அப்போது தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்கள் தினமும் காலை நேரத்தில் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காகவும், பொழுதை கழிக்கவும் வெளியே நடமாடுவது தெரியவந்தது. இதனால் அப்பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருவது உறுதி செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து காசிம்வயல், சளிவயல், கோகோ காடு, சிவசண்முகநகர் உள்ளிட்ட இடங்களில் தடுப்புகள் அமைத்து அப்பகுதி மக்கள் வெளியே வராத வகையில் அடைத்தனர். தொடர்ந்து போலீஸ் மற்றும் ஊர்க்காவல் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள தெருக்கள் முழுவதும் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டது. இதேபோல் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பதற்கு தன்னார்வலர்களை அதிகாரிகள் நியமித்தனர்.

இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் பாஸ்கரன் கூறியதாவது:-

சளி வயல் பகுதியில் 27 பேரும், கோகோ காடு பகுதியில் 40 பேரும், காசிம்வயலில் 48 பேரும், சிவசண்முக நகரில் 12 பேரும் ஒரே நாளில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தொற்று தொடர்ந்து பரவாமல் இருக்க தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் சுமார் ஆயிரத்து 225 வீடுகளில் வசிக்கக்கூடிய 5 ஆயிரம் பொதுமக்கள் வெளியே நடமாட முடியாத வகையில் முக்கிய தெருக்கள், சாலைகள் தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள மக்கள் எக்காரணத்தைக் கொண்டும் வெளியே நடமாட கூடாது. இதை கண்காணிக்க போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள மக்கள் தடையை மீறி வெளியே நடமாடுவது தெரியவந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் எச்சரித்துள்ளார்.
Tags:    

Similar News