செய்திகள்
கோப்புப்படம்

அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 6 பேர் பலி - 293 பேருக்கு தொற்று

Published On 2021-05-24 23:24 IST   |   Update On 2021-05-24 23:24:00 IST
அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும், 293 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
அரியலூர்:

அரியலூர் மாவட்டத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரேநாளில் மாவட்டத்தில் மொத்தம்293 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனால் பாதிப்பு எண்ணிக்கை 9,327 ஆக உயர்ந்துள்ளது. இதில் 66 பேர் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் கொரோனாவுக்கு அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 69, 49, 65, 70 வயதுடைய 4 ஆண்களும், 59 வயதுடைய பெண் ஒருவரும், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 72 வயதுடைய ஆண் ஒருவரும் என மொத்தம் 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது.

மருத்துவமனைகளில் இருந்து கொரோனாவுக்கு 7,235 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 2,020 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சிகளில் உள்ள கிராமங்களில் கொரோனா அறிகுறிகள் உள்ள நபர்களை கண்டறியும் பொருட்டு, வீடு வீடாக சென்று ஆய்வு செய்ய பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தினமும் 50 வீடுகளுக்கு சென்று பொதுமக்களுக்கு பரிசோதனை செய்து அவர்களில் உடல் வலி, சளி, காய்ச்சல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் இருந்தால் கிராம செவிலியர் மூலம் வட்டார மருத்துவ அலுவலருக்கு தகவல் தெரிவிப்பார்கள். ஆகவே, பொதுமக்கள் அனைவரும் வீடு தேடி வரும் பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா கேட்டுக் கொண்டுள்ளார்.

Similar News