செய்திகள்
போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருப்பதை படத்தில் காணலாம்.

காஞ்சீபுரத்தில் காய்கறி சந்தையில் சமூக இடைவெளியை மறந்த பொதுமக்கள்

Published On 2021-05-24 22:29 IST   |   Update On 2021-05-24 22:29:00 IST
காஞ்சீபுரம் ராஜாஜி காய்கறி சந்தையில் பொதுமக்கள் சமூக இடைவெளியை மறந்து காய்கறிகளை வாங்கி சென்றனர்.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம் காய்கறி சந்தையில் பொதுமக்கள் சமூக இடைவெளியை மறந்து குவிந்தனர்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த மாதம் 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு இருந்தது. தளர்வுகளுடன் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதால் அத்தியாவசிய தேவையின்றி பொதுமக்கள் சுற்றி திரிந்ததால் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளிலும் தாமதம் ஏற்பட்டது.

எனவே பொதுமுடக்கத்தை மேலும் கடுமையாக்க முடிவு செய்து இன்று (திங்கட்கிழமை) முதல் ஒரு வார காலத்துக்கு தளர்வில்லா பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது.

பொதுமக்கள் தங்களுக்கு தேலையான பொருட்களை வாங்க வசதியாக நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று இரவு வரை அனைத்து கடைகளையும் திறக்க தமிழக அரசு அனுமதித்தது. அரசு மற்றும் தனியார் பஸ்களும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

நகரில் காந்தி சாலை, காமராஜர்சாலை, மூங்கில் மண்டபம், பஸ் நிலையம் போன்ற பகுதிகளில் கூட்ட நெரிசலுடன் காணப்பட்டது. முக்கியமாக காஞ்சீபுரம் ராஜாஜி காய்கறி சந்தையில் பொதுமக்கள் சமூக இடைவெளியை மறந்து காய்கறிகளை வாங்கி சென்றனர். காய்கறிகளின் விற்பனையும் 2 முதல் 3 மடங்கு அளவுக்கு அதிகரித்து இருந்தது.

இதே போன்று சூழ்நிலையை பயன்படுத்தி காய்கறி வியாபாரிகள் விலையை அதிகரித்திருப்பது கண்டனத்துக்குரியது என பொதுமக்கள் புலம்பினார்கள்.

காய்கறிகள் வரத்து குறைவு காரணமாகத்தான் விலையை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Similar News