செய்திகள்
கோப்புபடம்

சிவகிரி அருகே இளம்பெண் மர்ம மரணம் - கணவர் குடும்பத்தாரிடம் போலீசார் தீவிர விசாரணை

Published On 2021-05-21 16:14 IST   |   Update On 2021-05-21 16:14:00 IST
சிவகிரி அருகே இளம்பெண் மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் குறித்து கணவர் குடும்பத்தாரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகிரி:

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே எல்லக்கடைக்கு உட்பட்ட குமாரவலசை சேர்ந்த சாமிநாதன் என்பவர் மகன் ராவுத்குமார் (வயது 32) இவருக்கும், வெள்ளோடு காமராஜ் நகரில் வசித்து வரும் நடராஜ் என்பவரின் மகள் திவ்யபாரதி (24) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

அவர்களுக்கு ஒரு வயதில் மகன் உள்ளான். இந்நிலையில் திருமணமான சில தினங்களில் இருந்தே ராவுத்குமார் அடிக்கடி தன்னிடம் சண்டை போடுவதாக திவ்யபாரதி தன் பெற்றோரிடம் கூறியுள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் திவ்யபாரதி தன் பெற்றோர்களுக்கு போனில் பேசியபோது மே 20-ந் தேதி தன் மகனுக்கு பிறந்தநாள் ஆகையால் நான் ஊருக்கு வருகிறேன் என்று கூறியுள்ளார்

நேற்று காலையில் நடராஜ் மகள் திவ்யபாரதிக்கு போன் செய்துள்ளார் அவர் போனை எடுக்கவில்லை. இதனால் உடனடியாக ராவுத்குமாருக்கு போன் செய்துள்ளார் அவரும் போன் எடுக்கவில்லை. பிறகு ராவுத்குமாரின் அப்பா சாமிநாதனுக்கு போன் செய்த போது அவர் நானும் என் மகன் ராவுத்குமாரும் அதிகாலையிலேயே தோட்டத்திற்கு வந்துவிட்டோம் என கூறியுள்ளார்.

சாமிநாதன் வீட்டுக்கு வந்து பார்த்த பொழுது மருமகள் திவ்யபாரதி பேச்சு மூச்சில்லாமல் படுக்கை அறையில் இருந்ததாகவும், உடனே அருகிலிருந்த கம்பவுண்டர் ஒருத்தரை அழைத்து பார்த்தபொழுது திவ்யபாரதி உயிரிழந்து பத்து நிமிடம் ஆகிவிட்டது என்று கூறினார் இதையடுத்து சாமிநாதன் நடந்த சம்பவம் குறித்து நடராஜிடம் கூறினார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த நடராஜ் வந்து பார்த்தபோது தன் மகள் திவ்யபாரதி முகம் மற்றும்உடலில் ரத்த காயத்துடன் இறந்து கிடந்ததை பார்த்து கதறி அழுதனர்.

பின் சிவகிரி போலீசில் தன் மகள் திவ்யபாரதி உடலில் காயம் உள்ளது. அவர் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும், கொலை செய்தவர்களை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு புகார் செய்தனர். திவ்யபாரதி உடல் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

சிவகிரி போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து ராவுத்குமார் அவரது தந்தை சாமிநாதன் மற்றும் அவரது மனைவி ஆகிய 3 பேரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Similar News