செய்திகள்
ஈரோடு மாவட்டத்தில் 2 மூதாட்டிகள் உள்பட 9 பேர் கொரோனாவுக்கு பலி
ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 மூதாட்டிகள் உள்பட 9 பேர் பலியாகினர். மேலும் நேற்று மாவட்டத்தில் புதிதாக 1,362 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரசின் 2-வது அலை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. கடந்த சில தினங்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று முன்தினம் மாவட்டத்தில் புதிய உச்சமாக 1,568 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
இந்தநிலையில் நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் புதிதாக மேலும் 1,362 பேருக்கு கொரோனா தெற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்து 107 ஆக உயர்ந்தது.
இதற்கிடையில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 64 வயது மூதாட்டி காய்ச்சல் மற்றும் சளி தொல்லை காரணமாக கடந்த 2-ந்தேதியும், 80 வயது மூதாட்டி கடந்த 7-ந்தேதியும் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு பரிசோதனை செய்தபோது கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து டாக்டர்கள் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி சிகிச்சை பலனின்றி 2 மூதாட்டிகளிலும் இறந்தனர்.
இதேபோல் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்றுவந்த 63 வயது ஆண் மற்றும் 75 வயது ஆண் கடந்த 9-ந் தேதியும், 70 வயது ஆண் கடந்த 11-ந்தேதியும், 72 வயது ஆண் கடந்த 12-ந்தேதியும் இறந்தனர்.
மேலும் கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வந்த ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 67 வயது ஆண், ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 55 வயது ஆண் இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினமும், ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 58 வயது ஆண் நேற்றும் இறந்தனர். இதனால் மாவட்டத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 210 ஆக உயர்ந்தது.
மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 804 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர்.
மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 28 ஆயிரத்து 711 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டு உள்ளனர்.
மேலும் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. தற்போது தொற்று உள்ள 8 ஆயிரத்து 186 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், இறப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வருகிறது. எனவே பொதுமக்கள் வெளியில் செல்லும்போது கண்டிப்பாக முக கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்றும், சமூக இடைவெளியை கடைபிடிக்க கோரியும், தேவையில்லாமல் யாரும் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.