செய்திகள்
புரூக்கோலி சாகுபடி

கொள்முதல் விலை உயர்வு- புரூக்கோலி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

Published On 2021-05-20 16:26 IST   |   Update On 2021-05-20 16:26:00 IST
தற்போது புரூக்கோலி கிலோ ஒன்றுக்கு ரூ.120 முதல் ரூ.130 வரை கொள்முதல் செய்யப்படுகிறது. வரும் மாதங்களில் இந்த விலை மேலும் உயர வாய்ப்புள்ளது.
கோத்தகிரி:

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் தேயிலை விவசாயமே பிரதானமாக உள்ளது. இதற்கு அடுத்தபடியாக விவசாயிகள் கேரட், பீட்ரூட், காலி பிளவர், முட்டை கோஸ், நூர்கோல், உருளைக்கிழங்கு, பீன்ஸ், வெள்ளைப்பூண்டு, முள்ளங்கி, மேரக்காய் உள்ளிட்ட மலை காய்கறிகளையும், சுகுனி, சல்லாரை, புரூக்கோலி, உள்ளிட்ட ஏற்றுமதி தரம் வாய்ந்த ஆங்கில வகை காய்கறிகளையும் பயிரிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது புரூக் கோலியின் கொள்முதல் விலை நிலையானதாக இருப்பதாலும், பயிரிட்ட விவசாயிகளுக்கு கணிசமான லாபம் கிடைத்து வருவதாலும் புரூக் கோலி சாகுபடி செய்யும் பணியில் விவசாயிகள் பலர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேரக்காய் பயிரிட அமைக்கப்பட்டுள்ள பந்தல்களுக்கு இடையே ஊடு பயிராகவும் புரூக்கோலியை விவசாயிகள் பயிரிடுகின்றனர்.

இதுகுறித்து கேர்பன் கிராமத்தை சேர்ந்த விவசாயி செந்தில் கூறியதாவது:-

கோத்தகிரி அருகே உள்ள நெடுகுளா, மசக்கல், கூக்கல் தொரை, கட்டபெட்டு, உயிலட்டி உள்ளிட்ட பகுதிகளில் புரூக் கோலி அதிகளவில் பயிரிடப்படுகிறது. நாற்று ஒன்றுக்கு 2 ரூபாய் ஆகிறது. நிலத்தை நன்கு பண்படுத்தி, புரூக் கோலி பயிரிட்டு பராமரித்து வந்தால் 65 முதல் 70 நாட்களில் அறுவடைக்கு தயாராகி விடும்.

தற்போது புரூக் கோலி கிலோ ஒன்றுக்கு ரூ.120 முதல் ரூ.130 வரை கொள்முதல் செய்யப்படுகிறது. வரும் மாதங்களில் இந்த விலை மேலும் உயர வாய்ப்புள்ளது. மேலும் பயிரிட்ட விவசாயிகளுக்கு கணிசமான லாபம் கிடைக்கும் என்பதால் புரூக்கோலியை சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டு வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News