செய்திகள்
கொரோனா வைரஸ்

புதுச்சேரியில் தந்தை, மகன்கள் கொரோனாவுக்கு பலி

Published On 2021-05-19 13:12 IST   |   Update On 2021-05-19 13:12:00 IST
புதுச்சேரியில் தந்தை, மகன்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அடுத்தடுத்து உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி:

புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் தனியார் துணிக்கடை உள்ளது. இதன் உரிமையாளருடன் அவரது சகோதரர், தந்தை ஆகியோர் கடையில் உதவியாக இருந்து வந்தனர்.

துணிக்கடை உரிமையாளரின் தம்பி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் உருளையன்பேட்டை தொகுதியில் அ.ம.மு.க. சார்பில் போட்டியிட்டார். அவர் கடந்த 2-ந் தேதி வாக்கு எண்ணிக்கைக்கு செல்வதற்காக கொரோனா பரிசோதனை செய்துகொண்டார். அப்போது அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது.

இதையடுத்து, அவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் பலியானார்.

அவருடன் தொடர்பில் இருந்த அவரது அண்ணன், தந்தை ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது. அவர்களும் திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் இரவு துணிக்கடை உரிமையாளர் இறந்தார். அவரது தந்தை நேற்று காலை சிகிச்சை பலனின்றி பலியானார்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, இரு மகன்கள் என 3 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து இறந்த சம்பவம் புதுச்சேரியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில் புதுச்சேரி மோகன் நகர் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் குமார் (வயது 49). கலால் துறை துணை தாசில்தாரான இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, கடந்த 10-ந் தேதி உயிரிழந்தார். இவரது மனைவியும் (45) தொற்றால் பாதிக்கப்பட்டு, கதிர்காமம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக இறந்து போனார்.

Similar News