செய்திகள்
ரங்கசாமி

கொரோனா சிகிச்சை முடிந்து ரங்கசாமி இன்று புதுவை திரும்பினார்

Published On 2021-05-17 15:20 IST   |   Update On 2021-05-17 15:20:00 IST
மருத்துவமனையிலிருந்து புறப்படும்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்த டாக்டர்கள், ஊழியர்களுக்கு புதுவை முதலமைச்சர் ரங்கசாமி நன்றி தெரிவித்தார்.
புதுச்சேரி:

புதுவை முதல்-அமைச்சராக ரங்கசாமி கடந்த 7-ந் தேதி பதவியேற்றார்.

பதவியேற்புக்கு முன்பே ரங்கசாமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பதவியேற்புக்கு பின்னரும் அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டதால் 9-ந் தேதி கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

இதில் தொற்று உறுதியானது. இதனால் அன்றைய தினமே சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றார்.

தொடர்ந்து ஒரு வாரம் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் ரங்கசாமி உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்து குணமடைந்தார். இதனையடுத்து அவர் மருத்துவமனையில் இருந்து இன்று புதுவை திரும்பினார்.

மருத்துவமனையிலிருந்து புறப்படும்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்த டாக்டர்கள், ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்தார். காலை 10 மணிக்கு சென்னையிலிருந்து காரில் புறப்பட்டு கோரிமேடு அப்பா பைத்தியம் சாமி கோவிலுக்கு வந்தார். அங்கு சாமி கும்பிட்டார்.

பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள தனது வீட்டில் ரங்கசாமி தனிமைப்படுத்திக்கொண்டார். டாக்டர்கள் குறைந்தபட்சம் ஒரு வாரம் தனிமையில் இருக்கும்படி அவரை அறிவுறுத்தி உள்ளனர்.

புதிய அரசில் ரங்கசாமி மட்டுமே முதல் அமைச்சராக பதவி ஏற்றுள்ளார். என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணியில் அமைச்சர்கள் யார்? என முடிவாகவில்லை. எம்.எல்.ஏ.க்களும் இதுவரை பதவியேற்கவில்லை.



மேலும் புதுவையில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டியுள்ளது. ஊரடங்கு காரணமாக புதுவை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அன்றாட கூலி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால், தமிழகத்தை போல் கொரோனா நிவாரணம் வழங்கப்படுமா? என எதிர்பார்ப்பும் எழுந் துள்ளது. இவை குறித்து ரங்கசாமி போனிலேயே அதிகாரிகளை தொடர்பு கொண்டு ஆலோசனை செய்து உத்தரவுகளை பிறப்பிக்க உள்ளார்.

Similar News