செய்திகள்
காய்கறிகள்

புதுவை பெரிய மார்க்கெட் இடமாற்றம்- கலெக்டர் உத்தரவை ஏற்க வியாபாரிகள் மறுப்பு

Published On 2021-05-17 03:32 GMT   |   Update On 2021-05-17 03:32 GMT
கலெக்டர் உத்தரவை ஏற்க பெரிய மார்க்கெட் வியாபாரிகள் மறுத்து விட்டனர். பஸ் நிலைய வளாகத்தில் தங்கள் பொருட்களுக்கு பாதுகாப்பு இல்லை என புகார் தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி:

புதுவையில் கொரோனா 2-வது அலை அதிவேகமாக பரவி வருகிறது.

நாள்தோறும் 2 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்படுகிறது. சராசரியாக 25 பேர் மரணமடைந்து வருகின்றனர். கொரோனா தொற்று பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

வருகிற 24-ந்தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மதியம் 12 மணிக்கு மேல் பொதுமக்கள் நடமாட தடை விதித்துள்ளனர்.

இந்த நிலையில் காந்தி வீதியில் உள்ள பெரிய மார்க்கெட்டில் இட பற்றாக்குறை நிலவுகிறது. இங்கு கொரோனா விதிமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை. சமூக இடைவெளியின்றி மக்கள் கூடி பொருட்களை பெற்று வருவதாகவும் புகார் எழுந்தது.

இதனையடுத்து கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் பெரிய மார்க்கெட்டை புதிய பஸ் நிலையம், கிழக்கு கடற்கரை சாலை, தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகம் ஆகியவற்றுக்கு இடமாற்றம் செய்ய அரசு முடிவு செய்தது. வியாபாரிகளை அழைத்து பேச்சுவார்த்தையும் நடத்தினர்.

இதனைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் பூர்வா கார்க், இன்று (திங்கட்கிழமை) முதல் புதிய பஸ்நிலையம், ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு பெரிய மார்க்கெட் இடமாற்றம் செய்யப்படும். மொத்தம், சில்லறை, அடிக்காசு காய்கறி வியாபாரிகள் இந்த இடங்களில் சமூக இடைவெளியோடு கடைகளை நடத்துவதை கண்காணிக்க வேண்டும் என நகராட்சி அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார்.

ஆனால், கலெக்டர் உத்தரவை ஏற்க பெரிய மார்க்கெட் வியாபாரிகள் மறுத்து விட்டனர். பஸ் நிலைய வளாகத்தில் தங்கள் பொருட்களுக்கு பாதுகாப்பு இல்லை என புகார் தெரிவித்துள்ளனர்.

நேற்று பெரியமார்க்கெட் இடமாற்ற அறிவிப்பு தொடர்பாக வியாபாரிகள் ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில், பெரிய மார்க்கெட்டில் சுமார் 40 மொத்த வியாபாரிகள் செயல்பட்டு வருகின்றனர்.

அவர்களை தொடர்ந்து அங்கேயே செயல்பட அனுமதிக்க வேண்டும். சில்லறை, அடிக்காசு வியாபாரிகளை நேரு வீதி, பழைய சிறைச்சாலை வளாகத்தில் கடைகளை அமைக்க அனுமதிக்க வேண்டும்.

எனவே, புதிய பஸ் நிலையத்துக்கு இடமாற்றம் செய்ய முடியாது என தீர்மானித்தனர். இதனால் இன்று (திங்கட்கிழமை) பெரிய மார்க்கெட் இடம் மாறவில்லை.

புதிய பஸ்நிலைய வளாகத்தில் காய்கறி வியாபாரிகள் கடைகளை அமைத்து வியாபாரம் செய்ய வசதியாக மேற்கூரை, குடிநீர், மின் இணைப்பு, தடுப்புகட்டை போன்றவற்றை நகராட்சி செய்து கொடுக்கவும் கலெக்டர் உத்தரவிட்டு இருந்தார். இதற்கான ஏற்பாடுகளும் புதுவை பஸ் நிலையத்தில் நடக்கவில்லை.

பெரிய மார்க்கெட்டை இடமாற்றம் செய்ய வியாபாரிகளின் எதிர்ப்பால் பதட்டமும், பரபரப்பும் உருவாகியுள்ளது.

Tags:    

Similar News