செய்திகள்
விமானத்தில் வந்த ஆக்சிஜன் சிலிண்டர்கள்

சிங்கப்பூரில் இருந்து 256 ஆக்சிஜன் சிலிண்டர்கள் சென்னை வருகை

Published On 2021-05-13 04:56 GMT   |   Update On 2021-05-13 04:56 GMT
இன்று இரவும் மேலும் 2 இந்திய விமானப்படை விமானங்களில் சிங்கப்பூரிலிருந்து காலி சிலிண்டர்கள் சென்னைக்கு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆலந்தூர்:

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதால், ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் உற்பத்தியாகும் ஆக்சிஜனை சேமித்து வைக்க போதிய சிலிண்டர்கள், கண்டெய்னர்கள் இல்லை.

இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜெர்மன், பிரிட்டன் ஆகிய நாடுகளிலிருந்து 900 காலி சிலிண்டர்கள் மற்றும் காலி கண்டெய்னர்கள் 2 இந்திய விமானப்படை விமானங்களில் சென்னை வந்தன.

அவைகள் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு குடோனில் வைக்கப்பட்டு,ஆக்சிஜன் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.



தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் ஆக்சிஜன் தயாரிக்க தற்காலிகமாக 3 மாதங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அங்கு உற்பத்தியாகும் ஆக்சிஜனை சேகரித்து வைக்க போதிய சிலிண்டர்கள், கண்டெய்னர்கள் இல்லை. இதையடுத்து தமிழக அரசு சிங்கப்பூர் அரசிடம் காலி சிலிண்டர்கள், காலி கண்டெய்னர்களை கேட்டது.

அதன்படி சிங்கப்பூரிலிருந்து 128 காலி சிலிண்டர்கள் மற்றும் காலி கண்டெய்னர்கள் உடன், இந்திய விமானப்படையின் முதல் விமானம் நேற்று இரவு 10 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வந்தது.

மேலும் 128 காலி சிலிண்டர்களுடன் இந்திய விமானப்படை விமானம் சிங்கப்பூரிலிருந்து இன்று அதிகாலை 2 மணிக்கு சென்னை விமானநிலையம் வந்தது.

சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறையினர் சோதனை நடத்திய பின் தமிழக அரசு அதிகாரிகளிடம் 256 காலி சிலிண்டர்கள், கண்டெய்னர்கள் ஒப்படைக்கப்பட்டது.

அதன்பின்பு அதிகாரிகள் அந்த காலி சிலிண்டர்கள், கண்டெய்னர்களை லாரிகள் மூலம் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

இதைப்போல் இன்று இரவும் மேலும் 2 இந்திய விமானப்படை விமானங்களில் சிங்கப்பூரிலிருந்து காலி சிலிண்டர்கள் சென்னைக்கு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.



Tags:    

Similar News