செய்திகள்
கோப்புப்படம்

கொரோனா நோயாளிகளுக்காக ஆக்சிஜன் வசதியுடன் கூடுதலாக 400 படுக்கைகள்

Published On 2021-05-12 18:25 GMT   |   Update On 2021-05-12 18:25 GMT
அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் வசதியுடன் கூடுதலாக 400 படுக்கைகள் அமைக்கப்பட உள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தொற்று கண்டறியப்படும் நபர்களுக்கு அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. வேலூர் பென்ட்லேன்ட், இ.எஸ்.ஐ., அடுக்கம்பாறை, குடியாத்தம் ஆகிய 4 அரசு மருத்துவமனைகளில் உள்ள சிறப்பு வார்டுகளில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

வேலூர் பென்ட்லேன்ட், இ.எஸ்.ஐ. ஆகிய மருத்துவமனைகளில் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் முதற்கட்டமாக அனுமதிக்கப்படுவார்கள். அங்கு அளிக்கப்படும் சிகிச்சையில் பாதிப்பு குறையாதவர்கள் மற்றும் மூச்சுத்திணறல் உள்ளவர்களுக்கு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அங்கு 550 படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிறப்பு வார்டு இயங்கி வருகிறது. தற்போது தொற்று அதிகரிப்பதால் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக அங்கு செல்கின்றனர். அதன்காரணமாக படுக்கைகள் இல்லாத நிலை காணப்படுகிறது.

மூச்சுத்திணறல் மற்றும் மோசமான நிலையில் மருத்துவமனைக்கு வரும் கொரோனா நோயாளிகள் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் இல்லாததால் ஆம்புலன்சில் காக்க வைக்கும் நிலை காணப்பட்டது. அதனை தவிர்க்க மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவின் அருகே காலி இடத்தில் கொரோனா சிறப்பு வார்டு அமைக்க தகரத்தால் ஷெட் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா நோயாளிகளுக்காக ஆக்சிஜன் வசதியுடன் கூடுதலாக 400 படுக்கைகள் அமைக்கப்பட உள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் 1,200 படுக்கைகள் உள்ளன. அவற்றில் கொரோனா சிறப்பு வார்டில் 550 படுக்கைகள் பயன்படுத்தப்படுகிறது. அதில், 350 படுக்கைகள் ஆக்சிஜன் வசதி கொண்டவை. தொற்று அதிகரிப்பு காரணமாக பிரசவம் மற்றும் குழந்தைகள்பிரிவு ஆகியவற்றை தவிர மற்ற சிகிச்சை பிரிவில் உள்ள படுக்கைகள் கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 400 படுக்கைகள் ஆக்சிஜன் வசதி உடையதாக மாற்றப்பட உள்ளது. இந்த படுக்கைகளில் மூச்சுத் திணறலால் அவதிப்படும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும். 400 சாதாரண படுக்கைகளை ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளாக மாற்றும் பணியில் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள். ஆக்சிஜன் வசதியுடன் கூடுதலாக படுக்கைகள் அமைந்தால் ஆக்சிஜன் தேவை மேலும் அதிகரிக்கும். எனவே மருத்துவமனையில் கூடுதலாக ஒரு ஆக்சிஜன் கொள்கலன் அமைக்கப்பட உள்ளது என்றனர்.
Tags:    

Similar News