செய்திகள்
காய்கறி மார்க்கெட்

விருதுநகரில் இன்று முதல் தற்காலிக காய்கறி மார்க்கெட் 5 இடங்களில் செயல்படும் - கமிஷனர் தகவல்

Published On 2021-05-11 07:10 IST   |   Update On 2021-05-11 07:10:00 IST
விருதுநகரில் காய்கறி மார்க்கெட் இன்று முதல் 5 இடங்களில் செயல்படும் என நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) ஜெகதீஸ்வரி தெரிவித்தார்.
விருதுநகர்:

விருதுநகரில் காய்கறி மார்க்கெட் இன்று முதல் 5 இடங்களில் செயல்படும் என நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) ஜெகதீஸ்வரி தெரிவித்தார்.

விருதுநகர் மெயின்பஜாரில் பிரதான காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.

இந்த காய்கறி மார்க்கெட்டில் போதிய இடவசதி இல்லாத நிலையில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து கடைகளை வைக்க முடியாத நிலையும் காய்கறி வாங்க வரும் மக்கள் நோய்தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்காத நிலையும் இருந்ததால் நோய்பரவல் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து காய்கறி மார்க்கெட்டினை கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட போது 5 இடங்களில் தற்காலிகமாக மாற்றப்பட்டது போல் தற்போதும் மாற்றப்படவேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.

இந்தநிலையில் மாவட்ட நிர்வாகம் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் காய்கறி மார்க்கெட்டுகளை நெரிசல் மிகுந்த பகுதிகளிலிருந்து விசாலமான பகுதிகளுக்கு மாற்ற உத்தரவிட்டது.

இந்நிலையில் விருதுநகரில் நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) ஜெகதீஸ்வரி மற்றும் பேரிடர் மேலாண்மை பொறுப்பு அதிகாரி சங்கரநாராயணன், தாசில்தார் சிவஜோதி ஆகியோர் காய்கறி வியாபாரிகளுடன் கலந்தாய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து மூன்று முறை கலந்தாய்வு மேற்கொண்டும் இப்பிரச்சினையில் முடிவு ஏற்படாத நிலை தொடர்ந்தது.

இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக காய்கறி மார்க்கெட்டை மாற்ற உத்தரவிட்டது.

தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் சாலையோர கடைகளை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினால் போதுமான இடைவெளி கிடைக்கும் என்றும் அங்கு வியாபாரம் செய்யும் வியாபாரிகள் தெரிவித்தனர். ஆனாலும் அதிகாரிகள் அதனை ஏற்றுக்கொள்ளாமல் மறுத்த நிலையில் காய்கறி மார்க்கெட்டை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) ஜெகதீஸ்வரி கூறியதாவது:-

மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுபடி காய்கறி மார்க்கெட் இன்று முதல் புதிய பஸ் நிலையம், அருப்புக்கோட்டை முக்கு ரோடு அருகே உள்ள நகராட்சி மைதானம், கே.வி.எஸ். மேல்நிலைப்பள்ளி, உழவர் சந்தை மற்றும் முஸ்லிம் நடுநிலைப்பள்ளி மைதானம் ஆகிய பகுதிகளில் இன்று முதல் மாற்றம் செய்யப்படுகிறது.

மறு உத்தரவு வரும் வரை இந்த இடங்களில் காய்கறி மார்க்கெட்டுகள் செயல்படும். எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி நோய் பரவல் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி காய்கறிகளை வாங்கி செல்ல வேண்டும்.

இவ்வாறு கமிஷனர் (பொறுப்பு) ஜெகதீஸ்வரி தெரிவித்தார்

Similar News