செய்திகள்
வேலூர் மண்டித்தெரு வெறிச்சோடி கிடப்பதை படத்தில் காணலாம்.

புதிய கட்டுப்பாடுகளால் கடைகள் அடைப்பு - பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Published On 2021-05-07 15:25 GMT   |   Update On 2021-05-07 15:37 GMT
வேலூர் மாவட்டத்தில் புதிய கட்டுப்பாடுகளால் கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
வேலூர்:

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த புதிய கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமலுக்கு வந்தன. இந்த கட்டுப்பாடுகளின்படி வேலூரில் நேற்று காலையிலேயே மளிகை மற்றும் காய்கறி கடைகள் திறக்கப்பட்டன. பொதுமக்கள் காலை நேரத்தில் சென்று காய்கறி, மளிகை பொருட்களை வாங்கிச் சென்றனர். வேலூர், காட்பாடியில் உள்ள உழவர் சந்தை கடைகள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

ஆனால் வேலூரில் உள்ள தற்காலிக மார்க்கெட்டில் கூட்டம் ஓரளவுக்கு காணப்பட்டது. தேவையில்லாத இதர பல கடைகள் நகரில் திறக்கப்பட்டு இருந்தன. அப்போது மாநகராட்சி அதிகாரிகள் திறக்க அனுமதிக்கப்படாத கடைகளை மூட உத்தரவிட்டனர். மேலும் அபராதமும் விதித்தனர்.

மதியம் 12 மணிக்கு பின்னர் மளிகை கடைகள், டீக்கடைகள், காய்கறி கடைகள் அடைக்கப்பட்டன. அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு பின்னர் திறந்திருந்த கடைகளை மூட போலீசார் அறிவுறுத்தினர். இதனை தொடர்ந்து வேலூர் மார்க்கெட், மண்டி தெரு, கிருபானந்த வாரியார் சாலை, அண்ணாசாலை, ஆற்காடு ரோடு பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டன. காட்பாடி, காந்திநகர், சித்தூர் சாலையில் உள்ள கடைகள் மூடப்பட்டன. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

மக்கள் நடமாட்டம் இல்லாததால் வேலூர் பழைய, புதிய பஸ் நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. பஸ்கள் 50 சதவீத பயணிகளுடன் இயக்கப்பட்டது. ஆனால் சில தனியார் பஸ்கள் அதிக பயணிகளை ஏற்றிச் சென்றன.

பால், மருந்து கடைகள், பெட்ரோல் பங்க்குகள் வழக்கம்போல் செயல்பட்டன. பேக்கரி கடைகள், ஓட்டல்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே திறந்திருந்தன. அங்கு உட்கார்ந்து சாப்பிட அனுமதி அளிக்கவில்லை. பார்சல் மூலம் பொருட்கள் விற்பனை செய்ய அதிகாரிகள் அனுமதித்தனர்.

இறைச்சி கடைகளும் மதியம் 12 மணிக்கு பின்னர் மூடப்பட்டது. இந்த கட்டுப்பாடுகள் மாவட்டம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டது.

பகல் 12 மணிக்கு அனைத்து கடைகளும் மூடப்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News