செய்திகள்
பரிசோதனை செய்வதற்காக சளி மாதிரி சேகரிக்கப்பட்டதை படத்தில் காணலாம்.

வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 648 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Published On 2021-05-06 18:08 GMT   |   Update On 2021-05-06 18:08 GMT
வேலூர் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக வேலூர் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக காணப்படுகிறது.
வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக வேலூர் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக காணப்படுகிறது. வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 516 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் நேற்றைய பரிசோதனைகளின் முடிவில் மேலும் 648 பேருக்கு தொற்று உறுதியானது. அதில், 400-க்கும் மேற்பட்டோர் வேலூர் மாநகராட்சி பகுதியை சேர்ந்தவர்கள். மேலும் சிகிச்சைக்காக வேலூருக்கு வந்த பிறமாநிலங்களை சேர்ந்தவர்களுக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டது. கொரோனாவினால் பாதிக்கப்பட்ட 648 பேரும் அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனாவினால் 28,534 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 25 ஆயிரத்து 492 பேர் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்தனர். 408 பேர் உயிரிழந்துள்ளனர். 2,633 பேர் மருத்துவமனை, வீடுகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

காட்பாடி தாலுகாவில் நேற்று ஒரே நாளில் 105 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதில் விருதம்பட்டு, வி.ஜி. ராவ்நகர், இ.பி. காலனி, காங்கேயநல்லூர், காந்தி நகர், காட்பாடி, பர்னீஸ்வரம், கார்ணாம்பட்டு, கீழ்வடுகன்குட்டை, உள்பட பல்வேறு இடங்களில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, வி.ஐ.டி.சித்தா சிகிச்சை மையம் ஆகியவற்றில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். சிலர் தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டனர்.

ஒரு தெருவில் 3 வீடுகளிலோ அல்லது ஒரே குடும்பத்தில் 4 பேருக்கோ கொரோனா தொற்று கண்டறியப்பட்டால் அந்த தெரு தகரத்தால் அடைக்கப்படுகிறது. அந்த தெருவில் வசிப்பவர்கள் மோட்டார் சைக்கிளில் சென்று வருவதற்காக தெருவில் சிறிதளவு பகுதி மட்டும் மூடப்பட்டிருக்காது.

மேலும் தகரத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதி என்று ஒட்டப்படும். 14 நாட்களுக்கு பின்னர் அந்த தகரம் அகற்றப்படும்.

கொரோனா பரவலை தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி, வேலூர் மாநகராட்சி பகுதியில் தற்போது 28 தெருக்கள் கொரோனா பாதிப்பு காரணமாக தகரத்தால் அடைக்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தும் நாட்கள் முடிவடைந்ததால் ஏற்கனவே அடைக்கப்பட்டிருந்த 6 தெருக்களில் இருந்த தகரம் அகற்றப்பட்டன என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News