செய்திகள்
குடியாத்தம் அருகே கிணற்றில் தவறி விழுந்து பெண் பலி
குடியாத்தம் அருகே பம்புசெட் கிணற்றின் தொட்டியில் தண்ணீரில் எடுக்க வந்த பெண் கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
குடியாத்தம்:
குடியாத்தம் அருகே மீனூர் கொல்லைமேடு பகுதியைச் சேர்ந்தவர் கருணாகரன், விவசாயி. இவரது மனைவி பரிமளா (வயது 36). நேற்று மாலை வீட்டுக்கு அருகே உள்ள பம்புசெட் கிணற்றின் தொட்டியில் இருந்து வீட்டிற்கு குடத்தின் மூலம் தண்ணீர் எடுக்க வந்தார். தண்ணீர் எடுக்கும் போது திடீரென தவறி கிணற்றில் விழுந்தார். சுமார் 40 அடி ஆழமுள்ள அந்த கிணற்றில் விழுந்த பரிமளாவை காப்பாற்ற அக்கம்பக்கத்தினர் முயற்சி செய்துள்ளனர்.
ஆழம் அதிகமாக இருந்ததால் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றில் இறங்கி பரிமளாவை பிணமாக மீட்டனர்.
இதுகுறித்து குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு, சப்-இன்ஸ்பெக்டர் சக்கரவர்த்தி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.