செய்திகள்
கொரோனா பரிசோதனை

ஈரோடு மாநகராட்சியில் ஒரே நாளில் 1,100 பேருக்கு கொரோனா பரிசோதனை

Published On 2021-04-28 18:10 GMT   |   Update On 2021-04-28 18:10 GMT
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது
ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுபோல் ஈரோடு மாநகராட்சி பகுதியிலும் கொரோனா தொற்றில் இருந்து பொதுமக்களை மீட்க ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் எம்.இளங்கோவன் தலைமையில் மாநகராட்சி நிர்வாகத்தினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஈரோடு மாநகராட்சியை பொறுத்தவரை தினசரி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களின் தொடர்பில் இருந்தவர்கள் என்ற அடிப்படையில் தொடர்ந்து இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று ஒரே நாளில் 1,100 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதுபற்றி ஈரோடு மாநகராட்சி சுகாதார அதிகாரி டாக்டர் முரளி கூறியதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் தினசரி பாதிப்பு எண்ணிக்கையில் 40 சதவீதம் அளவுக்கு ஈரோடு மாநகராட்சியை சேர்ந்தவர்கள் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். பொதுவாக பணியின் நிமித்தமாக அடிக்கடி வெளியூர் சென்று வருபவர்கள் மூலம் ஈரோட்டில் 2-வது அலை கொரோனா பரவல் அதிகமாகி இருக்கிறது. இதுபோல் ஈரோட்டில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு வெளியூர்களில் இருந்து வந்து செல்பவர்களால் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. தற்போது ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன், மாநகராட்சி ஆணையாளர் எம்.இளங்கோவன் ஆகியோரின் ஆலோசனையின் பேரில் தினசரி 1,100 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. கடந்த 4 நாட்களாக இதுபோன்று தினசரி 1,100 பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது.

இவ்வாறு மாநகராட்சி சுகாதார அதிகாரி டாக்டர் முரளி கூறினார். நேற்று அன்னை சத்யா நகர் பகுதியிலும் மாநகராட்சி மருத்துவக்குழுவினர் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தனர்.
Tags:    

Similar News