செய்திகள்
கொரோனா தடுப்பூசி

ஈரோட்டில் 1 லட்சத்து 18 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி- கலெக்டர் கதிரவன் தகவல்

Published On 2021-04-27 10:51 GMT   |   Update On 2021-04-27 10:51 GMT
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 4 லட்சத்து 90 ஆயிரத்து 862 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. 1 லட்சத்து 18 ஆயிரத்து 282 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு உள்ளார்கள்.
ஈரோடு:

கொரோனா வைரஸ் நோய் பரவுவதை தடுப்பது குறித்து அரசு அதிகாரிகள், தனியார் ஆஸ்பத்திரிகள்-தனியார் தங்கும் விடுதிகளின் உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கு நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கி பேசும்போது கூறியதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் 550 படுக்கைகளும், ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் 208 படுக்கைகளும், கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் 20 படுக்கைகளும், பவானி அரசு ஆஸ்பத்திரியில் 18 படுக்கைகளும், சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள 20 படுக்கைகளும், அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் 10 படுக்கைகளும், பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் 8 படுக்கைகளும் என 834 படுக்கைகள் உள்ளன. இதில் கொரோனா நோயாளிகள் 375 பேரும், மற்ற நோயாளிகள் 122 பேரும் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். மீதமுள்ள 337 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.

தனியார் கல்லூரிகள், பள்ளிக்கூடங்களில் அமைக்கப்பட்டு உள்ள தற்காலிக கொரோனா சிகிச்சை மையங்களில் 2 ஆயிரத்து 700 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 1,367 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மேலும், தனியார் ஆஸ்பத்திரிகளில் 814 படுக்கைகளும் உள்ளன.

மாவட்டத்தில் இதுவரை 4 லட்சத்து 90 ஆயிரத்து 862 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. 1 லட்சத்து 18 ஆயிரத்து 282 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு உள்ளார்கள்.

இவ்வாறு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் கூறினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பி.தங்கதுரை, மாவட்ட வருவாய் அதிகாரி முருகேசன், மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன், ஈரோடு ஆர்.டி.ஓ. சைபுதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News