செய்திகள்
கோப்புபடம்

சொந்த ஊர் திரும்ப ரெயிலுக்காக காத்திருக்கும் வடமாநில தொழிலாளர்கள்

Published On 2021-04-25 13:52 IST   |   Update On 2021-04-25 13:52:00 IST
கடந்த சில நாட்களாக ஈரோட்டில் தங்கி வேலை பார்க்கும் வடமாநில தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் சொந்த மாநிலத்துக்கு திரும்பி செல்ல தொடங்கியுள்ளனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான வட மாநிலத்தவர்கள் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக கட்டிட வேலை, சாய, தோல் தொழிற்சாலை, சிப்காட் பகுதியில் செயல்படும் தொழிற்சாலைகள், தனியார் நிறுவனங்கள், பனியன் கம்பெனிகள், மில்கள், பானிபூரி வியாபாரம், டீக்கடை என பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர்.

ஈரோடு மாநகர் பகுதி, சென்னிமலை ,பெருந்துறை போன்ற இடங்களில் அதிக அளவு வடமாநிலத்தவர்கள் குடும்பத்துடன் தங்கியிருந்து பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த வருடம் கொரோனா தாக்கம் காரணமாக ஏராளமான வடமாநில தொழிலார்கள் அவர்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பிச் சென்றனர். பின்னர் மீண்டும் ஈரோடுக்கு வந்து வேலை பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் மீண்டும் கொரோனா தாக்கம் வேகமெடுத்து உள்ளதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.இதையொட்டி கடந்த சில நாட்களாக ஈரோட்டில் தங்கி வேலை பார்க்கும் வடமாநில தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் சொந்த மாநிலத்துக்கு திரும்பி செல்ல தொடங்கியுள்ளனர்.இதனால் கடந்த சில நாட்களாக ஈரோடு ரெயில் நிலையத்தில் வட மாநிலத்தவர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டு வந்தது.

இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனினும் இன்று சிறப்பு ரெயில்கள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வேலை பார்த்து வந்த வடமாநில தொழிலாளர்கள் ஈரோடு ரெயில் நிலையத்திற்கு நேற்று இரவு முதலே வந்து குவிய தொடங்கினர். இன்று காலையும் சிலர் கால்நடையாக ரெயில் நிலையத்திற்கு வந்தனர். இரவு வந்த வட மாநிலத்தவர்கள் ரெயில் நிலைய வளாகத்திலேயே தங்கினர்.

அதைத் தொடர்ந்து இன்று காலை இயக்கப்பட்ட சிறப்பு ரெயில்களில் சொந்த ஊருக்கு கிளம்பி சென்றனர்.

இன்று காலையும் ரெயில் நிலையம் பகுதியில் ஏராளமான வடமாநிலத்தவர்கள் தங்களது குடும்பத்தினருடன் ரெயிலுக்காக காத்திருந்தனர். 

Similar News