செய்திகள்
புதுவை நகரம் வெறிச்சோடியது

2-வது நாள் ஊரடங்கு: பஸ்கள்- ஆட்டோக்கள் இயங்கவில்லை - புதுவை நகரம் வெறிச்சோடியது

Published On 2021-04-25 05:21 GMT   |   Update On 2021-04-25 05:21 GMT
புதுவை- தமிழக எல்லைகளான கனகசெட்டிக்குளம், கோரிமேடு, மதகடிப்பட்டு, திருக்கனூர், கன்னியக்கோவில் பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

புதுச்சேரி:

புதுவையில் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது.

நாள் தோறும் 700-க்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். நேற்று 899 பேருக்கு தொற்று ஏற்பட்ட நிலையில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

புதுவையில் கதிர் காமம், ஜிப்மர், தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் ஏராளமான கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

கொரோனா பரவலை தடுக்க புதுவை அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.

தொற்று பரவலை தடுக்க முதல் கட்டமாக இரவு நேர ஊரடங்கு கடந்த 20-ந் தேதி முதல் அமலானது. ஆனாலும் தொற்று பாதிப்பு குறையவில்லை. இதனை தொடர்ந்து வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்தார்.

அதன்படி நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் நாளை (திங்கட்கிழமை) அதிகாலை 5 மணி வரை 55 மணி நேர தொடர் முழு ஊரடங்கு தொடங்கியது.

இதனால் நேற்று புதுவையில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. ஆனால் மருந்தகம், பால், மளிகை, காய்கறி, ஓட்டல், டீக்கடைகள், மற்றும் மார்க்கெட்டுகள் திறந்து இருந்தது.

வணிக, வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டு இருந்தது. அத்தியாவசிய தேவைகளுக்காக புதுவையில் குறைந்த அளவில் பஸ்கள் இயக்கப்பட்டது. ஆனால் அதில் குறைவான பயணிகளே பயணம் செய்தனர்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) 2-வது நாள் ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதனால் புதுவையில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. முக்கிய வீதிகளான நேரு வீதி, காந்தி வீதி, அண்ணாசாலை, காமராஜர் சாலை, மறைமலை அடிகள் சாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.

தியேட்டர்கள், மதுபான கடைகள் மூடப்பட்டு இருந்தது.

ஒரு சில தெருக்களில் மட்டும் சிறிய கடைகள் திறந்து இருந்தது. தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு கடை பிடிக்கப்பட்டதால் தமிழக அரசு பஸ்கள் இன்று புதுவைக்கு வரவில்லை. தனியார் பஸ்களும் இன்று இயங்கவில்லை.

புதுவை அரசு சார்பில் உள்ளூர் பஸ்கள் இயக்கப்படும் என புதுவை போக்குவரத்து துறை ஆணையர் அறிவித்து இருந்தார். அதன்படி ஒரு சில புதுவை சாலை போக்குவரத்து கழக (பி.ஆர்.டி.சி.) பஸ்கள் இயக்கப்பட்டது. ஆனால் அதில் பயணிகள் கூட்டம் இல்லை.

புதுவையில் இன்று பெரும்பாலான ஆட்டோக்கள், டெம்போக்கள் ஓடவில்லை. பொதுமக்கள் தேவையின்றி நடமாட கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்ததால் 90 சதவீத மக்கள் நடமாட்டம் இல்லை. இதனால் புதுவை நகரம் வெறிச்சோடி காணப்பட்டது.


புதுவை- தமிழக எல்லைகளான கனகசெட்டிக்குளம், கோரிமேடு, மதகடிப்பட்டு, திருக்கனூர், கன்னியக்கோவில் பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

வெளியூர்களில் இருந்து அத்தியாவசிய தேவையின்றி புதுவைக்குள் நுழைய யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.

புதுவையில் நாளை (திங்கட்கிழமை) முதல் வார நாட்களில் மதியம் 2 மணி வரை மட்டுமே அனைத்து கடைகளும் திறக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி 2 நாள் ஊரடங்கை தொடர்ந்து நாளை முதல் ½ நாள் ஊரடங்கு அமலுக்கு வருகிறது. நாளை மதியம் 2 மணி முதல் மறுநாள் காலை 5 மணி வரை அனைத்து கடைகளும் புதுவையில் அடைக்கப்பட்டு பகல் நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

Tags:    

Similar News