செய்திகள்
தேவாலயத்தில் திருப்பலி

நாளை முழு ஊரடங்கு: கத்தோலிக்க தேவாலயங்களில் இன்று மாலை திருப்பலி

Published On 2021-04-24 10:44 IST   |   Update On 2021-04-24 10:44:00 IST
கொரோனா முழு ஊரடங்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) அமல்படுத்தப்படுவதால், கத்தோலிக்க தேவாலயங்களில் வாராந்திர திருப்பலி இன்று (சனிக்கிழமை) மாலை நிறைவேற்றப்படும் என தமிழக ஆயர் பேரவை அறிவித்துள்ளது.
சென்னை :

கொரோனா முழு ஊரடங்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) அமல்படுத்தப்படுவதால், கத்தோலிக்க தேவாலயங்களில் வாராந்திர திருப்பலி இன்று (சனிக்கிழமை) மாலை நிறைவேற்றப்படும் என தமிழக ஆயர் பேரவை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக ஆயர் பேரவை தலைவரும், மதுரை உயர்மறை மாவட்ட பேராயருமான அந்தோணி பாப்புசாமி அனைத்து மறை மாவட்ட ஆயர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம் வருமாறு:-

கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் நாளை முழு ஊடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. எனவே ஞாயிறு திருப்பலியை முந்தைய நாளான இன்று (சனிக்கிழமை) மாலை நிறைவேற்றுமாறு பங்குத் தந்தையர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

திருமணங்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதாக ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டிருப்பின் இது குறித்து சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பில் முன் அனுமதி பெற வேண்டியது அவசியம். ஞாயிற்றுக்கிழமைகளில் புனித நிகழ்வுகள் ஏதும் முன்கூட்டியே திட்டமிட்டிருந்தால் அவற்றை தள்ளி வைப்பது அல்லது சனிக்கிழமைக்கு மாற்றியமைப்பது சிறந்தது.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆயர் பேரவையின் அறிவிப்பைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் ஞாயிறு திருப்பலி இன்று (சனிக்கிழமை) மாலை நிறைவேற்றப்படுகிறது.

இது தொடர்பாக அந்தந்த பங்குத் தந்தையர்கள் இறை மக்களுக்கு வாட்ஸ்-அப், எஸ்.எம்.எஸ். மூலமாக நேற்று தகவல் அனுப்பினர்.

Similar News