ஊருக்குள் வனவிலங்குகள் வருவதை தடுக்க வனப்பகுதியில் குட்டைகளில் நீர் நிரப்பி வரும் வனத்துறையினர்
தேன்கனிக்கோட்டை:
ஓசூர் வனக்கோட்டத்தில் அமைந்துள்ள செயற்கை குட்டைகளில், கோடையை கருத்தில் கொண்டு வனத் துறையினர் தொடர்ந்து தண்ணீர் ஊற்றி நிரப்பி வருகின்றனர். அதில் விலங்குகள் தாகத்தை தீர்த்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டத்தில் ஜவளகிரி, தேன்கனிக் கோட்டை, ஓசூர், ராயக்கோட்டை, உரிகம், அஞ்செட்டி வனச்சரகங்கள் யானைகள் நடமாட்டமுள்ள பகுதி. இங்குள்ள காட்டெருமை, மான், கரடி உள்ளிட்ட பல்வேறு வகையான விலங்குகள் உள்ளன.
கோடையில் வனப் பகுதியில் போதிய மழையின்றி வறட்சி ஏற்படும். அப்போது இயற்கை நீருற்று மற்றும் குட்டைகள் வறண்டு, விலங்குகள் நீருக்காக அருகிலுள்ள கிராமங்களுக்கு படையெடுக்கும். இதனால் வனத்துறையினர் ஆங்காங்கே தண்ணீர் தொட்டிகள் மற்றும் செயற்கை குட்டைகள் அமைத்து தண்ணீர் நிரப்புவது வழக்கம்.
தற்போது இயற்கை குட்டைகளில் கூட ஓரளவுக்கு தண்ணீர் உள்ளது. இருந்தாலும் கிராமங்களுக்கு விலங்குகள் படையெடுக்காமல் இருக்க வனத்துறையினர் அமைத்த தண்ணீர் தொட்டிகளிலும் தொடர்ந்து நீர் நிரப்பப்படுகிறது.
இதை யானை, காட்டெருமை, மான் உள்ளிட்ட விலங்குகள் குடித்து தாகம் தீர்த்து செல்கின்றன. இக்காட்சிகள் வனத்துறையினர் வைத்துள்ள கேமராவில் பதிவாகி உள்ளது. தேன்கனிக் கோட்டை வனப்பகுதியில் உள்ள சாமை ஏரி உள்ளிட்ட இயற்கை குட்டைகளிலும், யானைகள் தண்ணீர் அருந்தி தாகத்தை தீர்த்து வருகின்றனர்.