செய்திகள்
பாண்டி மெரினா கடற்கரையில் ஆபத்தான முறையில் குளிக்கும் சிறுவர்கள்.

பாண்டி மெரினா கடற்கரைக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்

Published On 2021-04-12 05:17 GMT   |   Update On 2021-04-12 05:17 GMT
புதுச்சேரி பாண்டி மெரினா கடற்கரைக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து செல்கிறார்கள். தடையை மீறி குளிப்பதால் உயிர்பலி ஏற்பட வாய்ப்புள்ளது.
புதுச்சேரி:

புதுச்சேரி மாநிலம் சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இங்கு புதுவை கடற்கரை, பாரதி பூங்கா, தாவரவியல் பூங்கா, மணக்குள விநாயகர் கோவில், அரவிந்தர் ஆசிரமம், நோணாங்குப்பம் படகு குழாம், ஊசுடு படகு குழாம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன.

இந்தநிலையில் வம்பாகீரப்பாளையம் கலங்கரை விளக்கம் அருகே மணல்பரப்புடன் உள்ள கடற்கரையை சுற்றுலா தலமாக்க புதுவை அரசு திட்டமிட்டது. இதற்காக சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அப்போதைய கவர்னர் கிரண்பெடி அறிவுறுத்தலின்படி சுற்றுலா துறை சார்பில் அழகிய மணல் பரப்பில், ‘பாண்டி மெரினா பீச்’ (கடற்கரை) உருவாக்கப்பட்டது.

அப்பகுதியில் அழகிய பிரெஞ்சு கால கட்டிட கலை நயத்துடன் வணிக வளாகம் கட்டப்பட்டது. அங்கு பல்வேறு விதமான உணவு அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு சுற்றுலா பயணிகள் கடற்கரையின் அழகை ரசித்து கொண்டே உணவு அருந்துவதற்காக பிரம்மாண்ட கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது குழந்தைகளை மகிழ்விப்பதற்காக விளையாட்டு சாதனங்கள், குதிரை சவாரி என பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

‘பாண்டி மெரினா பீச்’ பகுதிக்கு ஆரம்பத்தில் சுற்றுலா பணிகள், உள்ளூர்வாசிகள் செல்ல தயக்கம் காட்டி வந்தனர். ஆனால் தற்போது சுற்றுலா துறை சார்பில் பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. குறிப்பாக விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதும். எனவே பாண்டி மெரினா பீச்சில் இளைஞர்கள் பட்டாளம், சுற்றுலா பயணிகள் வருகை, உள்ளூர்வாசிகள் வருகை அதிகரிப்பால் அப்பகுதி களைகட்டி வருகிறது.

இந்நிலை நீட்டிக்க வேண்டுமென்றால் புதுவை அரசும், சுற்றுலா துறையும் அப்பகுதியில் சில கெடுபிடிகளை அவசியம் செய்ய வேண்டும். குறிப்பாக பீச்சுக்கு செல்லும் வழி பாதைதிறந்தவெளி மதுபான கூடமாக மாறி வருகிறது. ஆங்காங்கே குடிமகன்கள் அமர்ந்து மதுகுடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இதனால் சாலையோரம் மட்டுமின்றி மணல் பரப்பிலும் மதுபாட்டில்கள் கிடக்கிறது. சிலர் குடிபோதையில் மதுகுடித்துவிட்டு பாட்டில்களை உடைத்துவிட்டு செல்கிறார்கள். குடிபோதையில் சிலர் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடம் ரகளையில் ஈடுபடுகிறார்கள்.

அதேபோல் ‘பாண்டி மெரினா பீச்’ பகுதியில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தடையை மீறி சிலர் குளிக்கிறார்கள். குறிப்பாக சிலர் குழந்தைகளுடன் மிகவும் ஆபத்தான முறையில் கடலில் ஆழமான பகுதிக்கு சென்று குளிக்கின்றனர்.

இதனால் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பாண்டி மெரினா கடற்கரையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
Tags:    

Similar News