செய்திகள்
கொரோனா தடுப்பூசி

புதுவையில் கொரோனா தடுப்பூசி திருவிழா இன்று தொடங்கியது

Published On 2021-04-11 11:32 GMT   |   Update On 2021-04-11 11:32 GMT
புதுவையில் கடந்த ஒரு வாரமாக 200-க்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். படிப்படியாக கொரோனா தொற்று பாதிப்பு உயர்ந்து வருகிறது.

புதுச்சேரி:

நாடு முழுவதும் கொரோனா 2-வது அலையின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இந்தியாவில் 11 மாநிலங்களில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சில மாநிலங்களில் இரவில் ஊரடங்கும், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

வடமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வர இ-பாஸ் அவசியம் என தமிழக அரசும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மீண்டும் முககவசம் அணியாதவர்களுக்கு நாடு முழுவதும் அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

புதுவையில் கடந்த ஒரு வாரமாக 200-க்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். படிப்படியாக கொரோனா தொற்று பாதிப்பு உயர்ந்து வருகிறது. இதனால் அரசின் சுகாதாரத்துறையும் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஊரடங்கு இல்லாவிட்டாலும், இரவில் வழிபாட்டு தலங்கள், கடைகள், நிறுவனங்களை மூட அறிவுறுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தியேட்டர்களில் 50 சதவீதம் இருக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.

ஏற்கனவே பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. முககவசம் அணியாதவர்களிடம் ரூ.100 அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியம் என தொடர்ந்து சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகிறது.

அதுமட்டுமின்றி ஓட்டல் ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், ஆயுள் காப்பீடு நிறுவன ஊழியர்கள், ஆட்டோ டிரைவர்கள் என பிரிவு வாரியாக தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. 45 வயதுக்கு மேற்பட்ட தகுதியுடைய அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என கவர்னர் தமிழிசை வேண்டுகோளும் வைத்திருந்தார்.

இதனிடையே பிரதமர் மோடி நாடு முழுவதும் தடுப்பூசி திருவிழாவை நடத்தும்படி வேண்டுகோள் விடுத்தார். இதன்படி புதுவையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 14-ந் தேதி புதன் கிழமை வரை கொரோனா தடுப்பூசி திருவிழா நடக்கிறது.

அரசு மருத்துவமனைகள், மருத்துவக்கல்லூரிகளில் பரிசோதனை, தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பூசி திருவிழாவையொட்டி அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு, தனியார் பள்ளிகளில் முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

புதுவை மாநிலம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பூசி மற்றும் பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டது. இங்கு இன்று காலை 8 மணிக்கு தடுப்பூசி திருவிழா தொடங்கியது. ஒரு சில இடங்களில் சற்று காலதாமதமாக தொடங்கப்பட்டது.

விடுமுறை நாளான இன்று தடுப்பூசி போட்டுக் கொள்வதில் மக்களிடையே ஆர்வம் இல்லை. தடுப்பூசி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் சுகாதாரத்துறை சார்பில் பிரசாரம், துண்டுபிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது. விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஆகியவை ஒட்டப்பட்டது.

நாள்தோறும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை முகாம் நடக்கிறது. இந்த முகாமில் அதிகளவு மக்களை பங்கேற்க வைக்க தேவையான ஏற்பாடுகளை சுகாதாரத்துறை செய்துள்ளது. இதனால் பிற்பகலில் தடுப்பூசி போட்டுக்கொள்ள அதிகளவில் மக்கள் வருவார்கள் என சுகாதாரத்துறை எதிர்பார்த்துள்ளது.

Tags:    

Similar News