செய்திகள்
கோப்புபடம்

விளாகம் கிராமத்தில் நெல்மணிகளை கொள்முதல் செய்யக்கோரி விவசாயிகள் சாலை மறியல்

Published On 2021-04-08 13:32 GMT   |   Update On 2021-04-08 13:32 GMT
விளாகம் கிராமத்தில் நெல்மணிகளை கொள்முதல் செய்யக்கோரி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கீழப்பழுவூர்:

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட விளாகம் கிராமத்தில் ஏராளமான விவசாயிகள் நெல் பயிரிட்டு இருந்தனர். கடந்த மார்கழி மாதத்தில் பருவநிலை மாற்றத்தால் பெய்த மழையின் காரணமாக நெற்கதிர்கள் பாதிப்படைந்தன.

அறுவடை செய்யப்பட்ட அந்த நெற்கதிர்களை அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் பெற்றுக்கொண்ட நிலையில் விளாகம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினர் சட்டமன்ற தேர்தலை காரணம் காட்டி கொள்முதல் செய்யாமல் கிடப்பில் போட்டதாக கூறப்படுகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தலின் வாக்குப்பதிவு நேற்று முன்தினம் முடிவடைந்த நிலையில் நேற்று நெல்மணிகள் கொள்முதல் செய்யப்படும் என்று விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், நெல்மணிகள் கொள்முதல் செய்யப்படவில்லை.

ஆகவே, நெல்மணிகளை கொள்முதல் செய்யக்கோரி அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும்பொருட்டு அப்பகுதி விவசாயிகள் ஒன்றிணைந்து விளாகம் கிராமத்திலிருந்து ஆலம்பாடி மேட்டுத்தெரு செல்லும் சாலையில் நெல்மணிகளுடன் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், அவர்களது குடும்பத்தினரும் பங்கேற்றனர்.அரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News