செய்திகள்
கோப்புபடம்

சுங்கக்கட்டண உயர்வுக்கு மட்டும் நெடுஞ்சாலை ஆணையம் அவசரப்படுவது ஏன்? மக்கள் நீதி மய்யம் கண்டனம்

Published On 2021-04-04 13:08 GMT   |   Update On 2021-04-04 13:08 GMT
விருதுநகர்-சாத்தூர் இடையே நான்கு வழிச்சாலையில் சேதமடைந்த மேம்பாலம் சீரமைக்கப்படாத நிலையிலும் அருகில் உள்ள சுங்கச்சாவடியில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதற்கு மக்கள் நீதிமய்யம் கண்டனம் தெரிவித்துள்ளது.
விருதுநகர்:

மத்திய அரசு நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்ட பின்பு சாலை அமைப்பு பணிக்காகவும், பராமரிப்பு பணிக்காகவும் சுங்கச்சாவடிகள் அமைத்து கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை அமல்படுத்தியது. தொடக்கத்தில் சாலை அமைக்கப்பட்டதற்கான செலவு தொகை ஈடாகிய பின்பு சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை நிறுத்தப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்தது.

ஆனாலும் தொடர்ந்து சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை அமலில் இருந்து வருகிறது. தமிழகம் முழுவதும் 48 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் சுழற்சி முறையில் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது 24 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரையிலிருந்து தென்மாவட்டங்களுக்கான நான்கு வழி சாலையில் உள்ள கப்பலூர், எட்டூர் வட்டம், நாங்குநேரி ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. விருதுநகர் அருகே உள்ள எட்டூர் வட்டம் சுங்கச்சாவடியில் இதுவரை ரூ.85 ஒரு வழி கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த கட்டணம் ரூ.90 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த காலங்களில் நான்கு வழிச்சாலை சீரமைக்கப்படாத நிலையில் சுங்கச்சாவடி கட்டணம் வசூலிக்க கூடாது என்று மதுரை ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் மதுரை ஐகோர்ட்டு சாலை சீரமைக்கப்படும் வரை கட்டணம் வசூலிக்க தடை விதித்தும் மற்றும் 50 சதவீத கட்டணம் வசூலிக்க உத்தரவிட்டது.

இந்நிலையில் விருதுநகர் மத்திய மாவட்ட மக்கள் நீதி மய்யத்தின் செயலாளர் காளிதாஸ் விடுத்துள்ள அறிக்கை கூறியிருப்பதாவது:-

எட்டூர் வட்டத்தில் உள்ள சுங்கச்சாவடியில் நேற்று முதல் ரூ.5 கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

ஆர்.ஆர். நகரில் உள்ள நான்கு வழி சாலை மேம்பாலம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சேதமடைந்தது. ஆனால் இதுவரை இந்த மேம்பாலம் சீரமைக்கப்படவில்லை. மேலும் ஒருவழிப்பாதையாக்கியதால் விபத்து பகுதியாக இந்த பகுதி மாறிவிட்டது.

விருதுநகர்-சாத்தூர் இடையே நான்கு வழிச்சாலையை யும் சீரமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வரும் நிலையிலும் சேதமடைந்த சாலைகளை சீரமைக்காத நிலையிலும் சுங்கச்சாவடி கட்டணத்தை மட்டும் உயர்த்த மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அவசரம் காட்டுவது ஏன?் என்று தெரியவில்லை.

எனவே இந்த கட்டண உயர்வுக்கு கண்டனத்தை தெரிவித்து கொள்வதுடன் மத்திய அரசு இந்த கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அத்துடன் நான்கு வழி சாலை விபத்துக்களை தவிர்க்க சேதமடைந்த மேம்பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News