செய்திகள்
குருபரப்பள்ளி அருகே மரத்தில் கார் மோதி 2 பேர் பலி
குருபரப்பள்ளி அருகே சாலையோரத்தில் இருந்த மரத்தில் கார் மோதி 2 பேர் பலியானார்கள்.
குருபரப்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள பந்திகுறி கிராமத்தை சேர்ந்தவர் ரவி (வயது 40). கார் டிரைவர். இவரது நண்பர்கள் சின்னசூளாமலை கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளிகள் ஸ்டீபன் (28), திம்மராஜ் (40). இவர்கள் 3 பேரும், நேற்று முன்தினம் இரவு வேப்பனப்பள்ளியில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி காரில் வந்து கொண்டிருந்தனர்.
வேப்பனப்பள்ளி-குந்தாரப்பள்ளி சாலையில் நரணிகுப்பம் அருகே வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கார், சாலையோரம் இருந்த வேப்பமரத்தில் மோதியது. இந்த விபத்தில் டிரைவர் ரவி, ஸ்டீபன் ஆகிய 2 பேரும் இடிபாடுகளில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் திம்மராஜ் படுகாயம் அடைந்தார்.
அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்த திம்மராஜை, மீட்டு சிகிச்சைக்காக, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து குருபரப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.