செய்திகள்
விபத்து

செய்யாறு அருகே சரக்கு ஆட்டோ கவிழ்ந்து 23 பேர் காயம்

Published On 2021-03-29 11:11 GMT   |   Update On 2021-03-29 11:11 GMT
செய்யாறு அருகே சரக்கு ஆட்டோ கவிழ்ந்து 23 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்யாறு:

செய்யாறை அடுத்த மடிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் செய்யாறு நகரில் நடைபெற்ற காதணி விழாவில் கலந்துகொண்டனர். பின்னர் அவர்கள் சரக்கு ஆட்டோவில் வீட்டிற்கு திரும்பினர்.

செய்யாறு அருகே காஞ்சீபுரம் சாலையில் புளியரம்பாக்கம் பகுதியில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனை அருகே சரக்கு ஆட்டோவில் வந்து கொண்டிருந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சரக்கு ஆட்டோ சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 10 சிறுவர்கள் உள்பட 23 பேர் காயம் அடைந்தனர். உடனே அந்த பகுதியில் இருந்தவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மற்றும் அந்த வழியாக சென்ற கார்களின் மூலம் செய்யாறு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தீபக், முனுசாமி, கன்னியம்மாள், கண்மணிபாப்பா, ஜெயஸ்ரீ உள்பட 7 பேர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுகுறித்து செய்யாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News