செய்திகள்
கொரோனா வைரஸ்

கொரோனா பரவல் எதிரொலி- தேவகோட்டை பகுதியில் தடுப்புகள் அமைத்து கண்காணிப்பு

Published On 2021-03-28 12:27 IST   |   Update On 2021-03-28 12:27:00 IST
தடை செய்யப்பட்ட பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

தேவகோட்டை:

தமிழகத்தில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் முககவசம், சமூக இடைவெளி போன்றவற்றை பின்பற்றாமல் அலட்சியமாக இருப்பதால் கொரோனா வேகமாக பரவி வருகிறது.

கொரோனா பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பகுதியில் கொரோனா வேகமாக பரவி வருவதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். தேவகோட்டை ராம்நகர், கருதா ஊரணி ஆகிய பகுதிகளில் 5-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் இப்பகுதியில் தொற்று அறிகுறி உள்ள 20-க்கும் மேற்பட்டவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மேலும் அப்பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு அப்பகுதியில் இருந்து பொதுமக்கள் வெளியில் வரக்கூடாது என்றும், மற்ற பகுதிகளை சேர்ந்தவர்கள் இப்பகுதிக்கு செல்லக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தடை செய்யப்பட்ட பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

இதற்கிடையில் தேவகோட்டை மாவட்ட உணவு திட பாதுகாப்பு அலுவலர் டாக்டர் பிரபாவதி, தேவகோட்டை வட்டார மருத்துவ அலுவலகர் செல்வக்குமார் மற்றும் சுகாதார பணியாளர்கள் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News