செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

காரைக்காலில் தொற்று பரவலை தடுக்க மீண்டும் நடமாடும் கொரோனா பரிசோதனை முகாம்

Published On 2021-03-25 14:54 IST   |   Update On 2021-03-25 14:54:00 IST
காரைக்காலில் தொற்று பரவலை தடுக்க மீண்டும் நடமாடும் கொரோனா பரிசோதனை முகாம் நடத்தப்படும். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று மாவட்ட நலவழித்துறை அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காரைக்கால்:

காரைக்கால் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக தினமும் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. இதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை 4,207 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3,999 பேர் குணமடைந்துள்ள நிலையில் 128 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர். 75 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் காரைக்கால் மாவட்ட நலவழித்துறை துணை இயக்குனர் டாக்டர் மோகன்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன், கொரோனா தொற்று வரும் நாட்களில் அதிகரிக்கக்கூடும் என எச்சரித்திருந்தோம். அதன்படி கடந்த சில நாட்களாக இரட்டை இலக்கில் தொற்று அதிகரித்து வருகிறது.

எனவே பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், நடமாடும் கொரோனா பரிசோதனை முகாம் மீண்டும் தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி உங்கள் பகுதிக்கு வரும் நடமாடும் பரிசோதனை மைய ஊழியர்களிடம், பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து பரிசோதனை செய்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

பரிசோதனை செய்வதில் பொதுமக்கள் எந்தவித தயக்கமும் கொள்ளத்தேவையில்லை. கொரோனா தொற்று கண்டறியப்பட்டால், அவரது உடல் நிலையை ஆராய்ந்து, வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெற அனுமதிக்கப்படுகிறது.

தேர்தல் முடிந்த பிறகு மருத்துவமனையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும். கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News