செய்திகள்
மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி முகாமை கவர்னர் தொடங்கிவைத்தார்

தடுப்பூசி போட்டு கொரோனா பரவலை தடுப்போம்- கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவுறுத்தல்

Published On 2021-03-25 08:58 GMT   |   Update On 2021-03-25 08:58 GMT
புதுச்சேரியில் கொரோனா தொற்று தற்போது அதிகரித்து வருகிறது. தடுப்பூசியை போட்டு கொரோனா பரவலை தடுப்போம் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
பாகூர்:

புதுச்சேரி சுகாதாரம் மற்றும் குடும்ப நல இயக்குனரகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, பிள்ளையார்குப்பம் மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் இலவச கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது.

மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் நடைபெற்ற முகாமுக்கு சுகாதாரத்துறை செயலர் அருண் தலைமை தாங்கினார். இயக்குனர் மோகன்குமார், ஶ்ரீபாலாஜி வித்யாபீத் துணை வேந்தர் சுபாஷ் சந்திர பரிஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் நிர்மல்குமார் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், தடுப்பூசி முகாமை தொடங்கிவைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

கொரோனா தடுப்பூசி அதிகப்படியான மக்களுக்கு போட வேண்டும். இதற்காக, புதுச்சேரியில் ஏற்கனவே தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது, இங்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நான் மருத்துவ கல்லூரியில் படித்தபோது, பல்வேறு நோய்களுக்கான தடுப்பூசிக்கு பிறநாடுகளை எதிர்பார்த்து இருந்தோம். தற்போது நமது விஞ்ஞானிகளின் முயற்சியாலும், பிரதமர் மோடியின் ஊக்கத்தாலும் நமது நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசி நமக்கே கொடுக்கப்படுகிறது. இதைவிட பெருமை ஒரு இந்தியனுக்கு இருக்க முடியாது.

வளர்ச்சி அடைந்த நாடுகள் கூட நமது நாட்டின் தடுப்பூசிக்காக காத்திருக்கின்றனர். இந்தியாவில் இருந்து 71 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றுமதியாகி வருகிறது. வருகிற 1-ந் தேதி முதல் 45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

புதுச்சேரியில் கொரோனா தொற்று தற்போது அதிகரித்து வருகிறது. இதற்காக தான் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என கேட்டுகொள்கிறோம். தடுப்பூசியை போட்டு கொரோனா பரவலை தடுப்போம். சில நாடுகளில் 4, 5-வது அலை வீசி வருகிறது. இந்த நிலைக்கு நாம் சென்று விடக்கூடாது, எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், சுகாதாரத்துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள், மகாத்மா காந்தி மருத்துவமனை டாக்டர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் கல்லூரி துணை முதல்வர் பத்மாவதி நன்றி கூறினார். முன்னதாக பாலாஜி வித்யாபீத் பல்கலைக்கழக துணை தலைவர் டாக்டர் பிரசாந்த் ராஜகோபாலன், கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார்.
Tags:    

Similar News