செய்திகள்
30 ஆயிரம் லிட்டர் பறிமுதல்: மதுபான குடோன்களில் துணை கலெக்டர் ஆய்வு
புதுவையில் சுமார் 30 ஆயிரம் லிட்டர் மது பானம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் மதுபான குடோன்களில் துணை கலெக்டர் சுதாகர் ஆய்வு மேற்கொண்டார்.
புதுச்சேரி:
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மதுபானங்கள் கடத்தப்படுவதை தடுக்க புதுவையில் 10 இடங்களில் சோதனை சாவடி அமைத்து கலால் துறையினர் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது சட்டவிரோதமாக கொண்டு செல்லப்படும் மதுபானங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
அதேபோல் திருட்டுத்தனமாக தயாரிக்கப்படும் மது பானங்களை கண்டறிந்து அவை அழிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை சுமார் 30 ஆயிரம் லிட்டர் மது பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் மதிப்பு ரூ.54 லட்சமாகும்.
விதிமுறைகளை மீறி மதுபானங்களை விற்றதாக இதுவரை 7 மது கடைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து கலால் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தநிலையில் கலால்துறை துணை ஆணையரும், துணை கலெக்டருமான சுதாகர் நேற்று அதிகாரிகளுடன் மதுபான கடை மற்றும் குடோன்களில் அதிரடி ஆய்வு நடத்தினார். அப்போது அனுமதி அளிக்கப்பட்டபடி மட்டுமே இருப்புகளை வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
மதுபான கொள்முதல், விற்பனை குறித்து பதிவேடுகளை முறையாக பராமரிக்கவும், கண்காணிப்பு கேமராக்களை பொருத்தவும் அவர் கேட்டுக்கொண்டார்.