செய்திகள்
பிரவீன் குமார்

பெருந்துறை அருகே மாணவியை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது

Published On 2021-03-22 12:53 GMT   |   Update On 2021-03-22 12:53 GMT
பெருந்துறை அருகே மாணவியை ஆசை வார்த்தை கூறி கடத்திய வாலிபரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.
பெருந்துறை:

பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பிளஸ்-1 மாணவி. இவர் நேற்று முன்தினம் காலை பள்ளிக்கூடம் சென்று விட்டு வருவதாக வீட்டில் கூறிவிட்டு புறப்பட்டார். ஆனால் மாலை வரை அவர் வீடு திரும்பவில்லை. இதனால் உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடிப்பார்த்தனர். அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து மாணவியின் தந்தை பெருந்துறை போலீசில் புகார் கொடுத்தார்.

அந்தப்புகாரில் அவர், ‘அதே பகுதியில் வசிக்கும் சுகுமார் என்பவரின் மகன் பிரவீன்குமார் (வயது 24) எனது மகளை கடத்தி சென்றுவிட்டார். அவரிடம் இருந்து எனது மகளை மீட்டு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கம், சப்-இன்ஸ்பெக்டர் மார்ட்டின் லூதர் ஆகியோர், பிரவீன் குமாரையும், மாணவியையும் வலைவீசி தேடி வந்தனர். போலீஸ் தன்னை தேடுவதை அறிந்த பிரவீன்குமார், மாணவியுடன் நேற்று மதியம் பெருந்துறை போலீசில் தஞ்சமடைந்தார்.

இதைத்தொடர்ந்து போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பெருந்துறை சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருவதாகவும், மாணவியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றதாகவும் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை கைது செய்தனர்.

மேலும் மைனர் பெண்ணை கடத்தி சென்றதால் பிரவீன்குமார் மீது பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான குற்றச்செயல்களுக்கான தனிப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேலு போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தார்.

பின்னர் பிரவீன்குமார் ஈரோடு மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
Tags:    

Similar News