புதுவையில் 13 தொகுதிகளில் களமிறங்கிய குடும்ப, வாரிசு வேட்பாளர்கள்
புதுச்சேரி:
புதுவை முதல்-அமைச்சர், சபாநாயகர், மத்திய மந்திரி என புதுவை அரசியலில் பல்வேறு பதவிகளை வகித்தவர் பரூக். இவரது மகன் ஷாஜகான்.
இவர் கடந்த காலங்களில் லாஸ்போட்டை, காலாப்பட்டு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர். தற்போது காமராஜர் நகர் தொகுதியில் களம் இறங்கியுள்ளார்.
புதுவை அரசியலில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக அசைக்க முடியாத சக்தியாக திகழ்பவர் ரங்கசாமி. இவரது அண்ணன் ஆதிகேசவன் மருமகன் நமச்சிவாயம்.
கடந்த 96-ம் ஆண்டு அரசியலுக்கு வந்தார். 3 முறை அமைச்சர் பதவி வகித்த நமச்சிவாயம் தற்போது பா.ஜனதா வேட்பாளராக மண்ணாடிப்பட்டு தொகுதியில் போட்டியிடுகிறார்.
காங்கிரஸ் மற்றும் என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராக பதவி வகித்தவர் சந்திர காசு. இவரது மகள் சந்திர பிரியங்கா. என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளராக நெடுங்காட்டில் கடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் தற்போது 2-வது முறையாக களமிறங்கியுள்ளார்.
காரைக்கால் வடக்கு தொகுதியில் காங்கிரஸ் மற்றும் என்.ஆர். காங்கிரஸ் கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் திருமுருகன். தற்போது என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார். இவர் முன்னாள் எம்.எல்.ஏ. நளமகராஜனின் மகனாவார் .
காரைக்கால் மாவட்டம் நிரவி திருப்பட்டினத்தில் தொடர்ந்து வெற்றி பெற்று சபாநாயகர் உள்ளிட்ட பதவிகளை வகித்தவர் சிவக்குமார். இவரது மகன்கள் மனோகரன், ராஜகணபதி ஆகியோர் பா.ஜனதா வேட்பாளராகவும், சுயேச்சையாகவும் போட்டியிடுகின்றனர்.
முன்னாள் எம்.எல்.ஏ. ராமநாதனின் மகன் செந்தில்குமார். இவர் பாகூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக களமிறங்கியுள்ளார். இவரது அண்ணன் ராதாகிருஷ்ணன் சபாநாயகர், எம்.பி .உள்ளிட்ட பதவிகளை வகித்தவர்.
புதுவை கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் குருசாமி. இவர் எம்.எல்.ஏ.வாகவும் இருந்துள்ளார். இவரது மகன் பன்னீர்செல்வம் உழவர்கரை தொகுதியில் 3-வது முறையாக என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
வில்லியனூர் தொகுதியில் வெற்றிபெற்ற அமைச்சர் பதவி வகித்தவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆனந்த பாஸ்கரன். இவரது அண்ணன் மகனான சண்.குமாரவேல மங்கலம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.
சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக இருந்த உத்தரவேலுவின் மகன் லட்சுமிகாந்தன்.
கடந்த தேர்தலில் ஏம்பலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார் தற்போது 2-வது முறையாக என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
உத்தரவேலுவின் தம்பியும், முன்னாள் அமைச்சருமான ராஜவேலு தற்போது நெட்டப்பாக்கம் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளராக 2-வது முறையாக போட்டியிடுகிறார்.
நெல்லிதோப்பு தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக களமிறங்கியுள்ள விவியன் ரிச்சர்ட்ஸ். அரசியலுக்கு புதுமுகம். இவரது தந்தை முன்னாள் எம்.எல்.ஏ. ஜான்குமார்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜெயமூர்த்தி தம்பி ஆனந்தன் மணவெளி தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுவதற்கு மனு தாக்கல் செய்துள்ளார். இவர் கொம்யூன் பஞ்சாயத்து தலைவராகவும் இருந்துள்ளார்.
உப்பளம் தொகுயில் தொடர்ந்து 4 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றவர் அன்பழகன். இவரது தம்பி பாஸ்கர் 3-வது முறையாக முதலியார்பேட்டையில் களமிறங்கி உள்ளார்.