செய்திகள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா
கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக கொரோனா மீண்டும் வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 13 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி:
தமிழ்நாட்டில் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவ தொடங்கியது. அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பரவி உயிர் இழப்புகள் ஏற்பட்ட நிலையிலும் கடந்த ஆண்டு மார்ச், ஏப்ரல் ஆகிய 2 மாதங்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா பரவவில்லை.
கடந்த ஆண்டு மே மாதம் முதல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவ தொடங்கியது. படிப்படியாக கொரோனா தொற்று பரவி உச்சத்தை தொட்டது. மேலும் உயிர் இழப்புகளும் அதிகரித்தன. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வரை அதிகமாக காணப்பட்ட கொரோனா தொற்று படிப்படியாக குறைந்தது. இதனால் தினமும் ஒருவர் அல்லது 2 பேர் பாதிக்கப்படும் நிலைக்கு வந்தது.
இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக கொரோனா மீண்டும் வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 13 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 64 ஆக உள்ளது.
கடந்த 14-ந் தேதி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 32 ஆக இருந்த நிலையில் தற்போது கொரோனாவால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது. அதாவது கடந்த 7 நாட்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.