செய்திகள்
பிரதமர் மோடி

புதுச்சேரிக்கு 30-ந்தேதி பிரதமர் மோடி வருகை

Published On 2021-03-21 05:41 IST   |   Update On 2021-03-21 05:41:00 IST
புதுச்சேரிக்கு 30-ந்தேதி பிரதமர் மோடி வருகிறார். தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகிறார்.
புதுச்சேரி:

புதுச்சேரிக்கு 30-ந்தேதி பிரதமர் மோடி வருகிறார். தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகிறார்.

மாநில பா.ஜ.க. பொதுச்செயலாளர் ஏம்பலம் செல்வம் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சராக இருந்த நாராயணசாமியின் நிர்வாக திறமையின்மை காரணமாக, புதுவை மாநிலம் 20 ஆண்டுகளுக்கு பின்னோக்கி சென்றுவிட்டது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் சொன்னதில் 90 சதவீதத்தை நிறைவேற்றவில்லை. மில்கள் மூடப்பட்டதால் வேலையில்லா திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது.

கடந்த கால காங்கிரஸ் அரசின் சாதனை என்பது மின் கட்டணத்தை உயர்த்தியது, குப்பைக்கு வரிபோட்டது, சொத்துவரி, தண்ணீர் வரியை உயர்த்தியது தான். முதல்-அமைச்சர் நிவாரண நிதி, சுற்றுலாத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. இதுதொடர்பாக பொதுமக்களிடம் கருத்துகேட்டு ஊழல் பட்டியல் தயார் செய்துள்ளோம்.

தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள பிரதமர் மோடி 30-ந் தேதி புதுச்சேரி வருகிறார். அன்றைய தினம் மாலை 4 மணியளவில் ரோடியர் மில் திடலில் நடக்கும் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இ்தில் தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்.

மத்திய மந்திரி நிதின்கட்காரி நாளை (திங்கட்கிழமை) புதுவை வருகிறார். மாலையில் ஜெயராம் திருமண மண்டபத்தில் நடக்கும் கூட்டத்தில் அவர் கலந்துகொள்கிறார்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலையில் லாஸ்பேட்டை மற்றும் மண்ணாடிப்பட்டு தொகுதிகளில் நடிகை கவுதமி பிரசாரம் மேற்கொள்கிறார். அதேபோல் வருகிற 24-ந்தேதி மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் புதுவையில் தேர்தல் அறிக்கை வெளியிடுகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் ராஜீவ்சந்திர சேகர் எம்.பி. கூறுகையில்,

தோல்வி பயத்தால் தேர்தலில் நாராயணசாமி போட்டியிடவில்லை. காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி அரசு பெரிய அளவில் ஊழல் செய்துள்ளது. அதை நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் வெளியில் கொண்டுவருவோம். மத்திய அரசு புதுவை மாநிலத்துக்கு ரூ.15 ஆயிரம் கோடி கொடுத்தது. அந்த நிதி எங்கே போனது?

5 வருடம் பொது நிதியை தவறாக பயன்படுத்தி உள்ளனர். அதை அப்போதைய கவர்னர் தட்டிக்கேட்டு வெளிப்படையாக நடக்கச் சொன்னதால் அவருடன் சண்டை போட்டார்கள் என்றார்.

Similar News