செய்திகள்
பாகூரில் மோட்டார் சைக்கிளில் மது பாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது
பாகூரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் மது பாட்டில்கள் கடத்தி வந்த 2 பேரை கைது செய்தனர்.
பாகூர்:
பாகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் நேற்று சோரியாங்குப்பம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தும்படி போலீசார் சைகை செய்தனர். ஆனால் அந்த மோட்டார் சைக்கிள் நிற்காமல் வேகமாக சென்றது.
இதையடுத்து போலீசார் தங்களது வாகனத்தில் விரட்டி சென்று மோட்டார் சைக்கிளை மடக்கி பிடித்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பைகளில் 50-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் கடத்தி செல்வது தெரியவந்தது. இதையடுத்து மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள், தேங்காய்திட்டு திலகர் நகர் பகுதியை சேர்ந்த கணேஷ் (வயது 38), பாப்பஞ்சாவடி பகுதியை சேர்ந்த ஜீவகன் (36) என்பதும் தெரியவந்தது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். மதுபாட்டில்கள், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.