செய்திகள்
விருதுநகர் கலெக்டர் கண்ணன்

7 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதல்கட்ட பயிற்சி வகுப்பு - கலெக்டர் ஆய்வு

Published On 2021-03-18 23:40 IST   |   Update On 2021-03-18 23:40:00 IST
விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பினை மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் கண்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விருதுநகர்:

சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ந் தேதி நடைபெற உள்ளதையொட்டி மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 2,370 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.

இந்த வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவு நடைமுறை குறித்த முதல்கட்ட பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.

இந்த பணியில் ஈடுபட உள்ள வாக்குச்சாவடி தலைமை அலுவலர், வாக்குச்சாவடி அலுவலர்கள் 1,2, 3 என மூன்றுஅலுவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

அதன் அடிப்படையில் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் பணியாற்றவிருக்கும் 11 ஆயிரத்து 376 வாக்குச்சாவடிஅலுவலர்களுக்கும் சம்பந்தப்பட்ட தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் தலைமையில் மண்டல அலுவலர்கள் வாக்குப்பதிவு பணி குறித்து பயிற்சி அளித்தனர்.

ராஜபாளையம் தொகுதிக்கு பயிற்சி வகுப்பு பி.ஏ.சி.எம். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிக்கு வி.பி.எம்.எம். நர்சிங் கல்லூரியிலும், விருதுநகர் தொகுதிக்கு கே.வி.எஸ். ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், சிவகாசி தொகுதிக்கு எஸ்.எப்.ஆர். கல்லூரியிலும், சாத்தூர் தொகுதிக்கு எஸ்.ஆர். நாயுடு கல்லூரியிலும், அருப்புக்கோட்டை தொகுதிக்கு தேவாங்கர் கலைக் கல்லூரியிலும், திருச்சுழி தொகுதிக்கு சி.இ.ஒ.எ. கல்லூரியிலும் நடைபெற்றது.

முதல்கட்ட பயிற்சி வகுப்பிலேயே வாக்குச்சாவடி அலுவலர் அனைவருக்கும் தபால் மூலம் வாக்களிக்க படிவம் 12டி வழங்கப்பட்டது.

தேர்தலையொட்டி வாக்குச்சாவடிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வாக்காளர் அனைவருக்கும் கையுறை வழங்கவும், கிருமி நாசினி மருந்து வழங்கவும், உடல் வெப்பநிலையை பரிசோதிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

இவ்வாறு கலெக்டர் கண்ணன் கூறினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மங்களராமசுப்பிரமணியன், சிவகாசி சப்-கலெக்டர் தினேஷ்குமார், மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர்கள் சங்கர்,எஸ்.நாராயணன், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் விருதுநகர் சந்தானலட்சுமி, ஸ்ரீவில்லிபுத்தூர் முருகன், தாசில்தார்கள் விருதுநகர் சிவஜோதி, சிவகாசி ராமசுப்பிரமணியன், ஸ்ரீவில்லிபுத்தூர் சரவணன் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News