செய்திகள்
விபத்துக்குள்ளான பஸ்சில் சிக்கிய பயணிகளை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்

அருப்புக்கோட்டையில் ஆம்னி பஸ் கவிழ்ந்து பெண் பலி

Published On 2021-03-17 09:47 IST   |   Update On 2021-03-17 09:47:00 IST
அருப்புக்கோட்டையில் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 16 பேர் படுகாயம் அடைந்தனர்.
அருப்புக்கோட்டை:

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் இருந்து படுக்கை வசதிகளுடன் கூடிய தனியார் ஆம்னி பஸ் 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்னை நோக்கி நேற்று இரவு புறப்பட்டது. நள்ளிரவு விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே வந்து கொண்டிருந்தது.

பந்தல்குடி புறவழிச்சாலையில் ஆம்னி பஸ் வந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அதே வேகத்தில் சாலையின் நடுவே உள்ள தடுப்பு மீது மோதி பஸ் கவிழ்ந்தது.

பஸ்சில் இருந்தவர்கள் கூக்குரலிட்டனர். நள்ளிரவு நேரத்தில் பயணிகள் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் திடீரென ஏற்பட்ட விபத்தினால் இடிபாடுகளில் சிக்கி வெளியே செல்ல வழியின்றி பயணிகள் பேருந்தின் உள்ளே அலறி துடித்தனர்.

இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த சென்னை ஆவடி பம்மல் தெருவை சேர்ந்த வேல்மணி (வயது 60) என்ற பெண் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 3 குழந்தைகள் உட்பட 16 பேர் படுகாயமடைந்தனர்.

விபத்து குறித்து தகவலறிந்த அருப்புக்கோட்டை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பஸ்சில் சிக்கியவர்களை மீட்டனர்.

பின்னர் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் 6 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த விபத்தால் மதுரை- தூத்துக்குடி 4 வழி சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கிரேன் மூலம் விபத்துக்குள்ளான ஆம்னி பஸ்சை அப்புறப்படுத்தி போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர்.

மேலும் விபத்து குறித்து நகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ஆம்னி பஸ் ஓட்டுனரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News