செய்திகள்
கோப்புபடம்

வெடி விபத்தில் ஒருவர் பலி: மாவட்ட வருவாய் அதிகாரி விசாரணை - கலெக்டர் உத்தரவு

Published On 2021-03-14 19:41 IST   |   Update On 2021-03-14 19:41:00 IST
வெடி விபத்து குறித்து மாவட்ட வருவாய் அதிகாரியின் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக கலெக்டர் கண்ணன் கூறினார்.
சிவகாசி:

விருதுநகரை அடுத்த குருமூர்த்தி நாயக்கன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் புதுராஜா என்ற தொழிலாளி பலியானார். 3 பேர் தீக்காயம் அடைந்தனர்.

இவர்கள் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தீக்காய சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களை நேரில் சந்தித்து விபத்து குறித்து கலெக்டர் கண்ணன் விசாரித்தார். பின்னர் விபத்தில் காயம் அடைந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.

அப்போது கலெக்டர் கண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆமத்தூர் அருகே உள்ள ஜி.என்.பட்டியில் இயங்கி வந்த மத்தாப்பூகுச்சிகள் தயாரிக்கும் ஆலையில் மத்தாப்பூ குச்சிகள் தயாரிக்கும் போது உராய்வு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.

இதுவரை பட்டாசு ஆலைகளில் வெடிகள் தயாரிக்கும் போது விபத்து ஏற்பட்டு வந்தது. தற்போது மத்தாப்பூகுச்சிகள் தயாரிக்கும் ஆலையில் இதுபோன்ற பெரிய அளவில் தீக்காயம் ஏற்படும் வகையில் விபத்து ஏற்பட்டு இருப்பது வியப்பாக இருக்கிறது.

தொழிலாளர்களுக்கு உரிய பயிற்சி அளித்து இனி வரும் காலத்தில் இதுபோன்ற விபத்துக்கள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மாவட்ட நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள குழுவினர் தினசரி 40-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த விபத்தில் அனுபவம் வாய்ந்த தொழிலாளர்கள் தான் பணியாற்றி உள்ளனர். விபத்து நேரத்தில் அவர்கள் தப்பிக்க வாய்ப்பு இருந்தும் பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து விசாரிக்க சம்பந்தப்பட்ட ஆலைக்கு சென்ற போது அங்கு யாரும் இல்லை.

மாவட்ட வருவாய் அலுவலரின் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். அவரின் அறிக்கைப்படி நடவடிக்கை எடு்க்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது சிவகாசி சப்-கலெக்டர் தினேஷ்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Similar News