செய்திகள்
ரகளையில் ஈடுபட்ட காங்கிரசார்.

நாராயணசாமி முன்னிலையில் புதுவை காங். கூட்டத்தில் ரகளை

Published On 2021-03-14 14:47 IST   |   Update On 2021-03-14 14:47:00 IST
காங்கிரசுக்கு கூடுதல் தொகுதி ஒதுக்காததை கண்டித்து மங்கலம் தொகுதி நிர்வாகிகள் காங்கிரஸ் அலுவலகத்துக்கு பூட்டு போடும் போராட்டத்தை நடத்தினார்கள்.
புதுச்சேரி:

புதுவை சட்டசபைக்கு வருகிற 6-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் காங்கிரஸ்- தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.

மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு 15 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. தி.மு.க.வுக்கு 13 இடங்கள் ஒதுக்கப்பட்டு 12 இடங்களுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டனர்.

கடந்த முறை காங்கிரஸ் 21 தொகுதியிலும், தி.மு.க. 9 தொகுதியிலும் போட்டியிட்டது. தற்போது தி.மு.க. வுக்கு கூடுதலாக 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த முறை காங்கிரஸ் போட்டியிட்ட காலாப்பட்டு, நெல்லித்தோப்பு, திருபுவனை, வில்லியனூர், ராஜ்பவன், பாகூர் ஆகிய தொகுதிகள் தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

காங்கிரசுக்கு கூடுதல் தொகுதி ஒதுக்காததை கண்டித்து மங்கலம் தொகுதி நிர்வாகிகள் நேற்று காங்கிரஸ் அலுவலகத்துக்கு பூட்டு போடும் போராட்டத்தை நடத்தினார்கள்.

இந்த நிலையில் வேட்பாளர்கள் தேர்வு குறித்த ஆய்வு குழு கூட்டம் வைசியாள் வீதியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

இதில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, மேலிட பொறுப்பாளர்கள் சஞ்சய்தத், திக்விஜய்சிங் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தி.மு.க.வுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்கியதற்கு நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது.

மேலும் நிர்வாகிகள் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிர்வாகிகளை சமாதானப்படுத்த முயன்றார். ஆனாலும், ரகளை நீடித்தது

இதுகுறித்த தகவல் அறிந்ததும் போலீசாரும், தேர்தல் பாதுகாப்பு பணிக்கு வந்திருந்த துணை ராணுவத்தினரும் அங்கு விரைந்தனர். காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நிர்வாகிகள் கூட்டத்தில் காங்கிரசார் ரகளையில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News