செய்திகள்
வாகன சோதனை

நம்பியூரில் பறக்கும்படை சோதனையில் வாழைக்காய் வியாபாரியிடம் ரூ.9 லட்சத்து 70 ஆயிரம் பறிமுதல்

Published On 2021-03-12 13:37 GMT   |   Update On 2021-03-12 13:37 GMT
பவானி குருப்பநாயக்கன் பாளையம் பகுதியில் வந்த போது தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் காரை நிறுத்தி சோதனை நடத்தினர்.

நம்பியூர்:

ஈரோடு மாவட்டம் கோபி செட்டி பாளையம் தொகுதிக்குட்பட்ட நம்பியூர் காசி பாளையம் பகுதியில் இரவு 1.30 மணியளவில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி முரளி தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனை செய்து கொண்டு இருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு மினி வேனை நிறுத்தி சோதனை நடத்தினர். அந்த வேனில் வந்த திருச்சி திருவானைக்காவல் பகுதியை சேர்ந்த முத்தமிழ் செல்வன் என்பவரிடம் ரூ.9 லட்சத்து 70 ஆயிரம் ரொக்கப்பணம் இருந்தது.

இதையடுத்து பறக்கும் படை அதிகாரிகள் அவரிடம் விசாரித்தனர். அப்போது அவர் தான் நெல், வாழைக்காய் வியாபாரம் செய்து வருவதாகவும், கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரில் டிராக்டர் வாங்குவதற்காக பணத்தை கொண்டு செல்வதாகவும் தெரிவித்தார்.

ஆனால் பணத்துக்கு எந்த ஆவணங்களும் இல்லை. இதையடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ரூ.9 லட்சத்து 70 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் பணத்தை கோபி ஆர்.டி.ஓ. பழனிதேவியிடம் ஒப்படைத்தனர். பணத்துக்கான ஆவணத்தை காட்டி விட்டு பணத்தை பெற்று செல்லுமாறு வியாபாரி முத்தமிழ் செல்வனிடம் கூறி அனுப்பி வைத்தனர்.

இதே போல் பவானி அருகே உள்ள காலிங்கராயன் பாளையம் மூவேந்தர் நகரை சேர்ந்தவர் தன்ராஜ், அவரது மனைவி சரஸ்வதி. இவர்கள் 2 பேரும் மேட்டூரில் இருந்து பவானிக்கு காரில் வந்து கொண்டு இருந்தனர். பவானி குருப்பநாயக்கன் பாளையம் பகுதியில் வந்த போது தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் காரை நிறுத்தி சோதனை நடத்தினர்.

அப்போது காரில் ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.1 லட்சத்து 90 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News